18 கொண்டை ஊசி வளைவுகள் பகுதியில் பேருந்து மீது பாறை விழுந்து 8 பேர் பலி என பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது

சமூக வலைத்தளங்களில் பரவும் இது போன்ற பதிவுகளில் உள்ள லிங்குகளை எக்காரணம் கொண்டும் கிளிக் செய்ய வேண்டாம்
by Anonymous |
ஜூன் 15, 2026
கண்டி – மஹியங்கனை (A26) வீதியில் அமைந்துள்ள 18 கொண்டை ஊசி வளைவுகள் பகுதியில் பயணித்த பயணிகள் பேருந்து ஒன்றின் மீது பாரிய பாறை ஒன்று விழுந்ததில் பேருந்தின் சாரதி உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளதாக புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்று பேஸ்புக் தளத்தில் பகிரப்பட்டு வருகின்றது. இந்த விபத்தின் “நேரடி வீடியோவை” பார்ப்பதற்கு வழங்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுமாறும் அந்தப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து factseeker ஆராய்ந்து பார்த்ததில் இது முற்றிலும் AI மூலமாக உருவாக்கப்பட்ட போலியான புகைப்படம் என்பதுடன், எட்டுப்பேர் உயிரிழந்ததாக பகிரப்படும் செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்பதையும் கண்டறிய முடிந்தது.
ஆய்வு:
இவ்வாறான ஒரு சம்பவம் பதிவாகியிருக்கும் என்றால் அது பிரதான செய்தி சேவைகளில் முக்கிய செய்தியாக வெளியாகியிருக்கும். ஆனால் அவ்வாறான எந்தவித செய்தியும் பிரதான ஊடகங்களில் வெளியாகியிருக்கவில்லை. அத்துடன் இலங்கை பொலிசார், வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) மற்றும் முன்னணி செய்தி நிறுவனங்களின் சமீபத்திய செய்தி அறிக்கைகளை பரிசோதித்ததில், இப்படியான எந்தவொரு விபத்தும் பதிவாகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உண்மை கண்டறியும் சோதனை மற்றும் ஆதாரங்கள்
1. டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்ட புகைப்படம்
இந்த புகைப்படத்தை உன்னிப்பாக அவதானிக்கும் போது, அது கணினி தொழில்நுட்பத்தின் மூலம் போலியாக உருவாக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. பேருந்தின் இலக்கத்தகடு போலியாக உள்ளது.
2. பேருந்தின் பெயர்பலகையிலும் பிழை காணப்படுகின்றது. AI மூலமாக உருவாக்கப்பட்ட புகைப்படம் என்பதை இது தெளிவாக காண்பிக்கின்றது.
3. புகைப்படத்தில் இருக்கும் இந்த பேருந்து அசோக் லேலன்ட் பெருந்தாகும். ஆனால் இந்த புகைப்படத்தில் பேருந்தில் இருக்கும் அசோக் லேலன்ட் லோகோவானத்தை குறித்த நிறுவனத்தில் சாயலில் இல்லாது வேறு மாதிரியாக உள்ளது.
அதேபோல் விபத்து நடந்த இடத்தில் இயற்கை காட்சிகளையும், பேருந்தின் மேல் இருக்கும் பாறையும் எந்தவித தொடர்பும் இல்லாது, செயற்கை தன்மையாக உள்ளது. இவற்றை வைத்து பார்க்கும்போது இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி என்பதை தெளிவாக உறுதிப்படுத்த முடிகின்றது.
மக்களை ஏமாற்றும் “கிளிக்பைட்” (Clickbait) மோசடித் திட்டம்
இந்தப் பதிவின் உண்மையான நோக்கம் அதன் இறுதி வரியில் மறைந்துள்ளது: “மேலே உள்ள லிங்க் மூலம் நேரடி வீடியோவை பாருங்கள்” என பொதுவாக மோசடி லிங்க் பதிவுகள் பகிரப்படுகின்றன. இது சமூக ஊடகங்களில் மோசடி செய்பவர்கள் (Scammers) பயன்படுத்தும் ஒரு பொதுவான உத்தியாகும். மக்களின் பயம் மற்றும் ஆர்வத்தை தூண்டி, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள இவ்வாறான போலி மரணச் செய்திகளை உருவாக்குகிறார்கள். அந்த “வீடியோவை” பார்ப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள லிங்கை யாராவது கிளிக் செய்தால், அது அவர்களை ஆபத்தான மூன்றாம் தரப்பு இணையதளங்களுக்கு அழைத்துச் செல்லும். இதன் மூலம்:
- உங்கள் சமூக ஊடக கணக்குகளின் கடவுச்சொற்கள் திருடப்படலாம் (Phishing).
- உங்கள் தொலைபேசி அல்லது கணினியில் ஆபத்தான வைரஸ்கள் (Malware/Spyware) தானாகவே பதிவிறக்கம் ஆகலாம்.
- மோசடிக்காரர்கள் தங்களின் இணையதள விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிப்பதற்கு வழிவகுக்கும்.
முடிவுரை
118 கொண்டை ஊசி வளைவுகள் பேருந்து மீது பாறை விழுந்து 8 பேர் உயிரிழந்ததாகப் பரவும் செய்தி முற்றிலும் பொய்யானது. அந்த புகைப்படம் போலியானது மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள லிங்க் மிகவும் ஆபத்தானது.
எமது மதிப்பீடு: முற்றிலும் பொய்யானது & மோசடி (FALSE & SCAM)

பொதுமக்களுக்கான எச்சரிக்கை: சமூக வலைத்தளங்களில் பரவும் இது போன்ற பதிவுகளில் உள்ள லிங்குகளை எக்காரணம் கொண்டும் கிளிக் செய்ய வேண்டாம். மேலும், இவ்வாறான போலிச் செய்திகளைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவேண்டும். இது தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துவதுடன் உங்களது மற்றும் உங்களைச் சார்ந்தவர்களின் இணையப் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமையலாம். நம்பகமான செய்திகளை எப்போதும் உத்தியோகபூர்வ ஊடகங்கள் மூலமாக மட்டுமே உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.