மெட்ரோ பேருந்துகளை யாழ்ப்பாணத்திற்கு வழங்காது அரசாங்கம் பாகுபாடு பார்ப்பதாக பகிரப்படும் போலிச்செய்தி:

மெட்ரோ பேருந்து ஒதுக்கீட்டில் யாழ்ப்பாணத்திற்கு எதிராகப் பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை, ஆண்டு இறுதிக்குள் யாழ்ப்பாணத்திற்கு விரிவாக்கம் செய்யப்படும் என உத்தியோகப்பூர்வ அறிக்கைகள் உறுதி செய்கின்றன.
by Anonymous |
ஆகஸ்ட் 4, 2026

கூற்று 1:
“வீரகேசரி இன்றைய செய்திகள்” எனும் முன்னணித் தமிழ் ஊடகப் பக்கத்தின் பெயரையும் லோகோவையும் தவறாகப் பயன்படுத்தி, “நல்லூரான் நவம்” என்ற முகநூல் கணக்கினால் பின்வரும் பதிவு வெளியிடப்பட்டுள்ளது:
“சிங்கள மக்களே, இந்தப் பிரிவினைவாதம் ஏன்? தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் அரசாங்கம் பாகுபாடு காட்டுவது சரியா? அரசாங்கம் எல்லா விஷயங்களிலும் தமிழ் மக்களிடம் நேர்மையற்று நடந்துகொள்கிறது. எனவே, சிங்கள மக்களே, நாடுகளிடையே இன ஒற்றுமை எப்படி இருக்க முடியும்?”
பதிவு இணைப்பு (Claim Link): https://www.facebook.com/share/p/19P1HwMdfc/

கூற்று 2:
அதே முகநூல் கணக்கினால் ஆகஸ்ட் 2ஆம் திகதி வெளியிடப்பட்ட மற்றொரு பதிவில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
“எனது கடுமையான எச்சரிக்கையை அடுத்து, அறிவார்ந்த யாழ்ப்பாண சமூகத்திற்காக ஜப்பானில் இருந்து அதிநவீன சொகுசு மெட்ரோ பேருந்துகளை இறக்குமதி செய்யவுள்ளதாக அனுர அரசாங்கம் அறிவித்துள்ளது. தெற்கு பிராந்தியத்திற்கு வழங்கப்பட்டுள்ள மெட்ரோ பேருந்து ஒரு சீனப் பேருந்து என்பதைக் குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது.”
பதிவு இணைப்பு (Claim Link): https://www.facebook.com/share/p/19KAAAJEkw/

உண்மை என்ன?
சமூக ஊடகங்களில் பரப்பப்படும் இக்கூற்றுகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை1. அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தரவுகள் மற்றும் காலவரிசைப் பரிசீலனையின்படி உண்மை நிலவரங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன:
1. ஜூலை 31 உத்தியோகபூர்வ அறிவிப்பு:
சமூக ஊடகப் பதிவுகளில் எச்சரிக்கை அல்லது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதற்கு முன்னரே, அதாவது ஜூலை 31ஆம் திகதியன்றே, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க மெட்ரோ பேருந்து சேவையின் விரிவாக்கத் திட்டத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.
2. கட்டம் கட்டமான சேவையாக்கம் மற்றும் பேருந்துகள் ஒதுக்கீடு:
- முதற்கட்டம்: சீனா மற்றும் பிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட 121 மெட்ரோ பேருந்துகள் பதிவு மற்றும் சட்டப் பணிகளுக்குப் பின், செப்டம்பர் மாதத்திற்குள் கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள நகர்ப்புறங்களில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
- இரண்டாம் கட்டம் (ஆண்டின் இறுதிக்குள்): இந்த ஆண்டின் இறுதிக்குள் ஜப்பானில் இருந்து கிடைக்கப்பெறவுள்ள மேலும் 50 மெட்ரோ பேருந்துகளைக் கொண்டு இச்சேவையானது கொளும்பைத் தாண்டி யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
3. உள்கட்டமைப்பு மற்றும் நீண்டகால இலக்குகள்:
- யாழ்ப்பாணம் மற்றும் கண்டியில் மெட்ரோ பேருந்து சேவையைத் தடையின்றி நடத்துவதற்காக பிரத்யேக மெட்ரோ பணிமனைகளை (Metro Depots) அமைக்கும் பணிகளும் திட்டமிடப்பட்டுத் தொடங்கப்பட்டுள்ளன.
- பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த மக்களை ஊக்குவிப்பதன் மூலம் போக்குவரத்து நெரிசல், எரிபொருள் நுகர்வு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைப்பதே அரசாங்கத்தின் நீண்டகால இலக்காகும்.
- 2030ஆம் ஆண்டிற்குள் மெட்ரோ பேருந்துகளின் எண்ணிக்கையை 500க்கும் அதிகமாக உயர்த்தவும், பேருந்துகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் தகவல்களைக் காட்சிப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ ஊடக ஆதாரங்கள்
- செய்தி ஆதாரம் 1: Athirady Tamil News – ஜூலை 31 அறிவிப்பு
- செய்தி ஆதாரம் 2: Newswire – New Metro buses to enter service soon; Jaffna and Kandy by year-end
- செய்தி ஆதாரம் 3: Daily Mirror – Metro bus service to expand to Jaffna, Kandy by year-end
தகவல் பகுப்பாய்வும் முடிவும்
“வீரகேசரி இன்றைய செய்திகள்” என்ற முகநூல் பக்கத்தில் “நல்லூரான் நவம்” என்ற கணக்கினால் பதிவேற்றப்பட்டுள்ள செய்திக்கு முன்னரே (ஜூலை 31 அன்று) மெட்ரோ பேருந்து சேவை யாழ்ப்பாணத்திற்கு வழங்கப்படும் என்ற தீர்மானம் அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அரசாங்கத்தின் திட்டமிட்ட நிர்வாக நடவடிக்கையைத் தனது எச்சரிக்கையினால் சாத்தியமானது எனக் கூறி உரிமை கோருவது தவறான தகவல் பரப்பும் அமைப்புகளின் “விவரிப்பு ஆக்கிரமிப்பு” (Narrative Hijacking) நுட்பமாகும்.
முடிவு: மெட்ரோ பேருந்துகளை யாழ்ப்பாணத்திற்கு வழங்காது அரசாங்கம் பாகுபாடு பார்ப்பதாகப் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் போலியானவை மற்றும் தவறான வழிநடத்தலாகும். இத்தகைய பதிவுகள் சமூக ஊடகங்களில் வெறுப்புப் பேச்சை உருவாக்கும் அதே நேரத்தில் வாசகர்களைத் தவறாக வழிநடத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளன.
- New Metro buses to enter service soon; Jaffna and Kandy by year-end – Newswire, https://www.newswire.lk/2026/07/31/new-metro-buses-to-enter-service-soon-jaffna-and-kandy-by-year-end/
- Metro bus service to expand to Jaffna, Kandy by year-end: Minister – Daily Mirror, https://www.dailymirror.lk/print/breaking-news/Metro-bus-service-to-expand-to-Jaffna-Kandy-by-year-end-Minister/108-347152