பாலம் இடிந்து விழுந்ததாக பகிரப்படும் AI காணொளி : Grok AI-இன் பதில்களிலும் தவறு

"பாலம் இடிந்து விழுந்ததாக வைரலாகும் வீடியோ செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்பட்டது; ஆனால் Grok AI அது சீனாவில் நடந்த உண்மையான சம்பவம் எனத் தவறாகக் குறிப்பிடுகிறது."
by Anonymous |
பிப்ரவரி 9, 2026

மோசமான காலநிலையை அடுத்து பாலம் ஒன்று இடிந்து விழுந்து, அதனுடன் வாகனங்களையும் மக்களையும் ஆற்றுக்குள் இழுத்துச் செல்லும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.சமூக ஊடகமான ‘X’ தளத்தில், “இதைப் பார்ப்பதற்கே மிகவும் பயமாக இருக்கிறது” (This is absolutely terrifying to watch) என்ற தலைப்புடன் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் உண்மையா என இணையதள பயனர்கள் பலர் கேள்வி எழுப்பியுள்ளதுடன், ‘Grok’ என்ற செயற்கை நுண்ணறிவு (AI) கருவியை பயன்படுத்தி பலர் இதனை உறுதிப்படுத்தவும் முயன்றுள்ளனர்.
எனினும் இந்த காணொளி குறித்து factseeker ஆய்வு செய்தபோது, இந்த காணொளியின் உண்மைத்தன்மைக்கும், Grok அளித்த பதில்களுக்கும் இடையில் சில முரண்பாடுகள் காணப்பட்டதுடன், AI தொழிநுட்பமான Grok இந்த விடயத்தில் தவறாக பயனாளர்களை வழிநடத்துவதை அவதானிக்க முடிந்தது.

உண்மைச் சரிபார்ப்பு (Fact Check)
factseeker முன்னெடுத்த ஆய்வில், சமூக ஊடகங்களில் பகிரப்படும் இந்தக் காணொளி தவறானது என்பதை உறுதிப்படுத்த முடிந்தது. இந்த வீடியோ உண்மையில் செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.
ஆய்வில் கண்டறியப்பட்ட முக்கிய விவரங்கள்:
Grok வழங்கிய பதில்களில், இந்த சம்பவம் உண்மை எனவும், இது கடந்த 2018 ஆம் ஆண்டு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் எனவும் குறிபிடப்பட்டுள்ளது. அதேபோல் இன்னொரு பதிவில் இந்த சம்பவம் கடந்த 2024 இல் ஷான்சி மாகாணம், சீனா (Zhaohui County, Shaanxi Province, China) இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது. மேலும் பல பகுதிகளை குறிப்பிட்டு அந்தப் பகுதிகளில் இடம்பெற்ற அனர்த்தம் என Grok பதிலளித்துள்ளது.
எனினும் இந்த வீடியோவின் காட்சிகளை வைத்து ‘ரிவர்ஸ் இமேஜ் சேர்ச்’ (Reverse Image Search) செய்து பார்த்ததில், இவ்வாறன அனர்த்தம் ஒன்று இடம்பெற்றதாக இதே வீடியோவைக் கொண்ட நம்பகமான சமூக ஊடகப் பதிவுகள் எதுவும் கிடைக்கவில்லை. பிரதான ஊடகங்களிலும் இவ்வாறான செய்திகள் பிரசுரமாகியிருக்கவில்லை.
காணொளியில் உள்ள முரண்பாடுகள்
இந்தக் காணொளியை மிக உன்னிப்பாக ஆய்வு செய்தபோது, அதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதைக் கண்டறிய முடிந்தது. குறிப்பாக அந்தக் காணொளியில் உள்ள மக்களின் செயற்பாடுகள் அனைத்துமே செயற்கைத்தனம் கொண்டதாக உள்ளது. தண்ணீருக்குள் விழ முன்னரே மக்கள் மாயமாக மறையும் நிலைமை காணப்படுகின்றது.

AI-ஆல் உருவாக்கப்பட்டதா அல்லது உண்மையானதா?
இந்தக் காணொளியின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக, Imgdetector.ai கருவியைப் பயன்படுத்தி அந்த வீடியோவை ஆய்வுசெய்த போது, .அந்த ஆய்வின் முடிவில், இந்தக் காட்சி 92 சதவீதம் செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என அக்காணொளி கண்டறியும் கருவி உறுதிப்படுத்தியது. ஆகவே அந்த உள்ளடக்கம் உண்மையானது அல்ல என்பதை மேலும் உறுதிப்படுத்த முடிகின்றது.

Grok-இன் தவறான பதில்கள்
வைரலான அந்தப் பதிவின் கீழ் X பயனர்கள் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு, அந்த வீடியோ ஒரு உண்மை என்பதை உறுதிப்படுத்தும்படி Grok AI-ஐக் கேட்டுள்ளனர். ஆனால், பெரும்பாலான பதில்களில், அந்த வீடியோ சீனாவில் பாலம் இடிந்து விழுந்த உண்மையான காட்சி என Grok AI பதிலளித்து, பயனாளர்களை தவறாக வழிநடந்தியுள்ளது.

Grok அந்த வீடியோ உண்மை எனக் குறிப்பிட்ட சில பதில்களில், அந்தப் பாலம் எங்கே, எப்போது இடிந்தது, எத்தனைபேர் உயிரிழந்துள்ளனர் என்பது போன்ற கூடுதல் விவரங்களையும் வழங்கியிருந்தது. இது முற்றிலும் தவறான தகவல்களாகும். குறிப்பாக, CNN, Al Jazeera, The Guardian, Newsweek, People’s Daily, WION மற்றும் பல சீன ஊடகங்கள் இந்த பாலம் இடிப்புச் சம்பவம் குறித்துச் செய்திகளை வெளியிட்டுள்ளதாக Grok மிக உறுதியாகக் கூறியிருந்தது (ஆனால் இவை அனைத்தும் தவறான தகவல்கள்).

சில இடங்களில் அந்த வீடியோ செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்பட்டது என்பதை Grok சரியாக பதிலளித்துள்ளது.
Note :- AI தொழில்நுட்பம் சில நேரங்களில் உண்மைகளைத் தவறாகப் புரிந்துகொண்டு, தவறான தகவல்களை மிக உறுதியாக வழங்கக்கூடும் இதை (AI Hallucination ) என கூறப்படுகின்றது. இந்த வகையான தவறுகளுக்கு இந்தக்கதை ஒரு தெளிவான உதாரணம்.
முடிவு
எனவே,இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ ஒரு உண்மையான சம்பவம் இல்லை என்பதுடன், இது முழுமையாகச் செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்பட்ட ஒரு காணொளி என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.
