Daraz இன் குலுக்கல் சீட்டிழுப்பு என பகிரப்படும் விளம்பரம் போலியானது

குறிப்பிட்ட நபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது அமைப்பின் பிரதிநிதிகள் போல் நடித்து மோசடியில் ஈடுபடுவது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் Daraz நிறுவனம் குறிப்பிட்டுள்ளது
by Anonymous |
செப்டம்பர் 9, 2023
நபிகள் நாயகத்தின் பிறந்தநாளையொட்டி(மீலாதுன் நபி), பிரபல இணைய வர்த்தக நிறுவனமான Daraz இன் குலுக்கல் சீட்டிழுப்பு குறித்த விளம்பரமொன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
மக்களை தவறாக வழிநடத்தும் இதுபோன்ற சீட்டிழுப்புகள் சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாக பகிரப்படுவதால், இதன் உண்மைத்தன்மை குறித்து Factseeker ஆராய்ந்து பார்த்தது.
இதன்போது, Daraz இன் வாடிக்கையாளர் சேவைத் துறையை தொடர்புகொண்டு வினவியபோது, Daraz இன் அதிகாரப்பூர்வ வலைதளத்தைத் தவிர Facebook, WhatsApp, Instagram, Twitter, Telegram போன்ற சமூக வலைதளங்களில் தங்களது விளம்பரங்களை விளம்பரப்படுத்துவதில்லை எனத் தெரிவித்தனர்.
மேலும், இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள , குறிப்பிட்ட நபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது அமைப்பின் பிரதிநிதிகள் போல் நடித்து மோசடியில் ஈடுபடுவது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
நிறுவனமானது விற்பனையாளர்கள், சேவை பெறுனர், பணியாளர்கள் மற்றும் பரந்த சமூகத்தை அதன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக மட்டுமே கையாள்கிறது என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போலி நபர்கள் அல்லது குழுக்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருப்பின், இலங்கை பொலிசாருக்கு மற்றும் இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழுவிற்கு (CERT) தெரிவிக்குமாறு Daraz நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
அதன்படி, Darazஇன் குலுக்கல் சீட்டிழுப்பு குறித்து சமூக வலைதளங்களில் பகிரப்படும் விளம்பரம் போலியான விளம்பரம் என்பதை Factseeker உறுதிப்படுத்துகிறது.