“Daily Ceylon” இணையதளத்தின் தவறான தலைப்பினால் பாராளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடு

பாராளுமன்றத்தில் எழுந்த இவ்விவாதத்திற்கு Daily Ceylon செய்தித் தளத்தில் வெளியான செய்தியின் தலைப்பே காரணமாகும்.
by Anonymous |
மார்ச் 18, 2025

“குழந்தை திருமணம் அனுமதிக்கப்பட்ட முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தை மாற்ற அரசு ஆலோசனை” என ஐக்கிய நாடுகள் சபையிடம் அமைச்சர் சரோஜா போல்ராஜ் கோரிக்கை விடுத்ததாக Daily Ceylon செய்தித் தளத்தில் வெளியான செய்தியின் தலைப்பை மேற்கோள்காட்டி கருத்தொன்றை நேற்று (17) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் உதுமா லெப்பே முன்வைத்திருந்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் சரோஜா போல்ராஜ், தான் ஐக்கிய நாடுகள் சபையில் அவ்வாறு எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை எனவும் Daily Ceylon செய்தித் தளம் தவறான செய்தியை வெளியிட்டுள்ளது எனவும் தெரிவித்திருந்ததுடன்,இது குறித்து அந்த இணையதளத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், இது குறித்து இன்று (18)நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் அமைச்சர் பிமல் ரத்தநாயக்க மற்றும் பிரதி அமைச்சர் முனீர் முலாபர் ஆகியோரும் தமது கருத்துக்களை தெரிவித்திருந்ததையும் அவதானிக்க முடிந்தது.
இந்நிலையில், இந்த சர்ச்சைக்குரிய விவகாரம் தொடர்பில் FactSeeker ஆராய்ந்து பார்த்தது. அந்தவகையில், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் உதுமா லெப்பே தெரிவித்த கருத்து தொடர்பில் அவதானித்த போது, அவர் Daily Ceylon செய்தித் தளத்தில் வெளியான தலைப்பை மேற்கோள்காட்டி பின்வருமாறு கூறியிருந்தார்:
“குழந்தை திருமணம் அனுமதிக்கப்பட்ட முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தை மாற்ற அரசு ஆலோசனை” என ஐக்கிய நாடுகள் சபையில் அமைச்சர் சரோஜா போல்ராஜ் கோரிக்கை விடுத்ததாக செய்தி வெளியாகியுள்ளது. மற்ற சமூகங்களை விட முஸ்லிம் சமூகத்தில் குறைந்த வீதத்திலேயே குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன. இவ்வாறு இருக்க,’குழந்தை திருமணம் அனுமதிக்கப்பட்ட முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம்’ என்று ஏன் எங்கள் முஸ்லிம் சமூகத்தை குறிக்கின்றீர்கள்? என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் சரோஜா போல்ராஜ், நான் ஐக்கிய நாடுகள் சபையில் இவ்வாறான கருத்தொன்றை தெரிவிக்கவில்லை, அங்கு “முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டம் குறித்து, அதன் திருத்தம் குறித்தும் அரசாங்கம் ஆலோசனைகளை நடத்தியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கலாச்சார உரிமைகளுக்கு இடையில் சமநிலையை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதை நிர்ணயிப்பதற்கும், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க பல துறைகளைக் கொண்ட குழுவை நிறுவுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் ” என்பதையே வலியுறுத்தினேன் என்ற விடயத்தை தெரிவித்திருந்தார்.
மேலும் Daily Ceylon செய்தித்தளம் தவறாக வழிநடத்தும் வகையில் செய்தியை பிரசுரித்துள்ளது. ஆகவே இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், Daily Ceylon இணையதளத்தின் ஆசிரியர் பீடமும் இது குறித்து விளக்கம் ஒன்றை பதிவிட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.
https://www.facebook.com/watch/?v=1037551734882964&rdid=G223JnwGUxmTi8sA
ஆகவே Daily Ceylon செய்தித் தளத்தில் வெளியான செய்தியை factseeker ஆராய்ந்த போது, ஐக்கிய நாடுகள் சபையால் வெளியிடப்பட்ட அறிக்கையை அடிப்படையாக கொண்டே அந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையும் Daily Ceylon செய்தியின் உள்ளடக்கத்தையும் ஒப்பிட்டு பார்த்ததில், Daily Ceylon இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியின் உள்ளடக்கத்தில் எந்தவொரு பிழையும் இல்லை என்பதை அவதானிக்க முடிந்தது.
இருப்பினும், இச் செய்திக்கு இடப்பட்ட தலைப்பே பிழையாக அமைந்துள்ளது. அதாவது அவ்வறிக்கையில் எந்தவொரு இடத்திலும் “குழந்தை திருமணம் அனுமதிக்கப்பட்ட முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம்” என்று அமைச்சர் சரோஜா போல்ராஜ் குறிப்பிடவில்லை. ஆனால், தலைப்பில் “குழந்தை திருமணம் அனுமதிக்கப்பட்ட முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தை மாற்ற அரசு ஆலோசனை – அமைச்சர் சரோஜா ஐ.நாடுகள் சபையிடம் உறுதி” என Daily Ceylon பிரசுரித்துள்ள செய்தியின் தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தலைப்பை அடிப்படையாக வைத்தே எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் உதுமா லெப்பே அவ்வாறான கருத்தினை முன்வைத்துள்ளார். ஆகவே, பாராளுமன்றத்தில் எழுந்த இவ்விவாதத்திற்கு Daily Ceylon செய்தித் தளத்தில் வெளியான செய்தியின் தலைப்பே காரணம் என்பதையும், அந்த தலைப்பு மக்களை தவறாக வழிநடத்துவதாக அமைந்துள்ளது என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகிறது.