Vitz ரக கார்கள் 12 லட்சத்துக்கு தரப்படும் என்று நளீன் ஹெவகே தெரிவித்தாரா?

2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதில் உள்ள கட்டுப்பாடுகள் காரணமாக Vitz மோட்டார் வாகனங்களும் இறக்குமதி செய்யப்படவில்லை
by Anonymous |
நவம்பர் 6, 2024

“ஒவ்வொரு குடும்பமும் 1.2 மில்லியன் ரூபாய்க்கு Vitz கார் ஒன்றை வாங்கும் பொருளாதார கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவோம்.” என தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் நளின் ஹேவகே கூறியதாக பதிவுகள் சில சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
இது தொடர்பில் FactSeeker ஆராய்ந்த போது, நளின் ஹேவகே இது குறித்து கருத்து தெரிவித்த காணொளியையும் அவதானிக்க முடிந்தது.
காணொளி : https://youtu.be/o20Z8pWHnOI
அக் காணொளியில், “ஜப்பானில் உள்ள Vitz மோட்டார் வாகனத்தை 1.2 மில்லியன் ரூபாய்க்கு கொள்வனவு செய்ய முடியும் ஆனால் இறக்குமதிக்கான வரி அதிகமாக விதிக்கும் நிலையே உள்ளது. ஆகவே ஒவ்வொரு குடும்பமும் வாகனம் வாங்கும் நிலைமையை அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் நாம் உருவாக்குவோம்” என்று நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.
இதன் படி, “ஒவ்வொரு குடும்பமும் குறைந்த விலையில் Vitz கார் ஒன்றை வாங்கும் பொருளாதார அமைப்பு ஒன்றை உருவாக்குவோம்” என அவர் தெரிவிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
மேலும், இது தொடர்பில் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நிஷாந்த ஏ.வீரசிங்கவிடம் FactSeeker வினவிய போது, 2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதில் உள்ள கட்டுப்பாடுகள் காரணமாக Vitz மோட்டார் வாகனங்களும் இறக்குமதி செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.

ஆகவே,”ஒவ்வொரு குடும்பமும் 1.2 மில்லியன் ரூபாய்க்கு Vitz கார் ஒன்றை வாங்கும் பொருளாதார அமைப்பு ஒன்றை உருவாக்குவோம்.” என நளின் ஹேவகே தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்ற பதிவுகள் தவறானவை என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.
 
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                            