ஹயேஷிகாவுக்காக பிரதமர் அலுவலகம் வி.ஐ.பி பாதுகாப்பைக் கோரவில்லை

ஹயேஷிகா பெர்னாண்டோவுக்கு அரசங்கம் அல்லது பிரதமர் அலுவலகம் தனிப்பட்ட பாதுகாப்பு வழங்கவில்லை மாறாக நிகழ்வில் பங்கேற்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்காகவே பொதுவான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
by Anonymous |
ஏப்ரல் 25, 2025

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பாடநெறிகளை கற்பிக்கும் ஆசிரியை ஹயேஷிகா பெர்னாண்டோ ஏற்பாடு செய்த நிகழ்வொன்றுக்கு பிரதமர் அலுவலகத்தின் கோரிக்கையின் பெயரில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதாக பதிவுகள் சில சமூகவலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.

கடந்த ஏப்ரல் 17ஆம் திகதி, ஹயேஷிகா பெர்னாண்டோவினால் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பாராட்டு விழாவொன்று நடத்தப்பது. அந் நிகழ்வில் அவரது நிகழ்நிலை (Online) வகுப்புகள் மூலம் பயிற்சி பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்ச்சி தொடக்கத்தில், பெரும் பாதுகாப்பு வாகனங்களுடன் ஹயேஷிகா பெர்னாண்டோ வருகை தரும் காணொளிகள் சில சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டன. இதனை மூலமாக கொண்டே அவருக்கு மிக முக்கியமான நபர்களுக்கான (VIP) பாதுகாப்பு வழங்கப்பட்டதாகப் பதிவுகளும் பகிரப்பட்டன. இதனையடுத்து, “சாதாரண குடிமகனுக்கு எப்படி இத்தகைய பாதுகாப்பு வழங்கப்படும்?” எனும் கேள்விகளும் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளதால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.

இந்நிலையில் “sudaa creations” என்ற YouTube பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியொன்றில், ஹயேஷிகா அனுப்பிய பாதுகாப்பு கோரிக்கை கடிதம் காண்பிக்கப்பட்டிருந்தது. அக் கடிதத்தில், குயின்ஸ் கல்விக் குழுமத்தின் பணிப்பாளர் ஹயேஷிகா பெர்னாண்டோவின் சார்பில் H.M.C. விஸ்வஜித் என்பவரால், 2025 ஏப்ரல் 2 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்திற்கு பாதுகாப்பு கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளதைக் காணலாம்.

இக் கடிதம் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் அனுப்பப்பட்டதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அக் கடிதத்தில், நிகழ்வில் பங்கேற்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்காகவே பாதுகாப்பு கோரப்பட்டுள்ளதாகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து பிரதமர் அலுவலகத்திடம் FactSeeker வினவியதில், “இந்நிகழ்வில் சுமார் 30,000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் பதில் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது,” என தெரிவித்தனர்.
எனினும், ஹயேஷிகா பெர்னாண்டோவுக்கு தனிப்பட்ட வகையில் VIP பாதுகாப்பு வழங்குமாறு பிரதமர் அலுவலகம் எந்தவொரு கோரிக்கையும் விடுக்கவில்லை என்றும், அவர் பயன்படுத்திய பாதுகாப்பு வாகனங்கள் தொடர்பான எவ்வித உத்தியோகப்பூர்வ ஆணையும் வழங்கப்படவில்லை என்றும் பிரதமர் அலுவலகம் உறுதியாக கூறியது.
ஆகவே, ஹயேஷிகா பெர்னாண்டோவுக்கு அரசங்கம் அல்லது பிரதமர் அலுவலகம் தனிப்பட்ட பாதுகாப்பு வழங்கவில்லை என்பதையும் நிகழ்வில் பங்கேற்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்காகவே பொதுவான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகிறது.
 
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                            