வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி.சரத் கழிப்பறையொன்றை திறந்துவைத்தாரென பகிரப்படும் போலிச்செய்தி

கடந்த 2019 மார்ச் 4ஆம் திகதி அன்று, பொலன்னறுவை பகுதியில் இடம்பெற்ற சமூகசேவை நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படமே இவ்வாறு பகிரப்படுகின்றது.
by Anonymous |
மார்ச் 26, 2025

வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி.சரத் கழிவறை ஒன்றை திறந்து வைத்துள்ளதாக விமர்சிக்கப்படும் புகைப்படத்துடனான செய்திகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது. இது குறித்து பிரதி அமைச்சர் டி.பி.சரத் மறுப்பு தெரிவித்து ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ள நிலையில் இதன் உண்மைத்தன்மை என்ன என்பது குறித்து factseeker ஆராய்ந்து பார்த்தது.
சமூக வலைதளங்களில் பகிரப்படும் இந்த செய்தி தொடர்பில் பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளனவா என ஆராய்ந்து பார்த்ததில், இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர கருத்து தெரிவித்திருந்த காணொளியொன்று நேற்று (25) ஹிரு தொலைக்காட்சியின் பிரதான செய்தியில் ஒளிபரப்பப்பட்டிருந்தது.
LINK :- https://www.facebook.com/share/v/1BDjQEzytZ/
இதே செய்தியை நேற்று (25) அருண செய்தித்தாளும் செய்தியாக வெளியிட்டுள்ளது. அதில்,”பிரதி அமைச்சர் புதிய கழிப்பறையொன்றை திறந்துவைத்துள்ளதுடன் அந்த புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும், இந்த செய்திகளில் உண்மையில்லை என பிரதி அமைச்சர் ஊடக அறிக்கை ஒன்றின் மூலமாக அறிவித்துள்ள நிலையில் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதானது,
சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுவரும் புகைப்படங்களும் தகவல்களும் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு பொலன்னறுவை பகுதியில் இளைஞர்கள் குழுவுடனான சமூக சேவை நடவடிக்கையின் போது எடுக்கப்பட்டவை என்று அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பகுதியில் ஒரு ஏழைக் குடும்பத்திற்கு கழிப்பறை கட்டப்பட்டதே தவிர அதற்காக எந்த விழாவும் எடுக்கவில்லை, இது சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஒரு சமூக நலச்செயல் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் ஆராயும் நோக்கில், பிரதி அமைச்சரின் முகநூல் பக்கத்தை ஆராய்ந்ததில், இது கடந்த 2019 மார்ச் 4ஆம் திகதி அன்று, அந்த நிகழ்வை விவரிக்கும் ஒரு பதிவு அவரது முகநூல் கணக்கில் வெளியிடப்பட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது.
ஆகவே, ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட சமூக நலத்திட்டம் ஒன்றின் போதும் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அடிப்படையாக வைத்தே பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தவறான கருத்தொன்றை முன்வைத்துள்ளார் என்பதையும் அவரது கருத்தை ஆதாரமாகக் கொண்டே பிரதான செய்தி தளங்கள் தவறான செய்தியை பதிவிட்டுள்ளனர் என்பதையும் factseeker உறுதிப்படுத்துகின்றது.