மாலினியின் இறுதிச் சடங்கில் நடிகர்கள் நடனமாடினார்களா?

மாலினி பொன்சேகாவின் இல்லத்தில் பாடல்கள் பாடி, நடனமாடுவதாக சமூகவலைதளங்களில் பகிரப்படும் காணொளி கடந்த மே மாதம் 12 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வொன்றில் எடுக்கப்பட்ட காணொளி ஆகும்.
by Anonymous |
மே 28, 2025

இலங்கை சினிமாவின் “ராணி” எனப் போற்றப்பட்ட மூத்த கலைஞர் மாலினி பொன்சேகாவின் இறுதிக்கிரியை, அரசாங்க அனுசரணையுடன் கடந்த மே 26ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.
இந்நிலையில், அந்த இறுதிக்கிரியையில் கலந்து கொண்ட சில நடிகர்/நடிகைகள் மாலினி பொன்சேகாவின் இல்லத்தில் பாடல்கள் பாடி, நடனமாடுவதாகக் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
இக் காணொளி தொடர்பில் சமூக வலைதளங்களில் பலரும் கருத்துகளை பகிர்ந்திருந்தனர். சிலர் இது பழைய காணொளியாக இருக்கலாம் என்றும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இந்த முரண்பாடுகளின் காரணமாக, FactSeeker இதன் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்தது.
சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், இது “சிகுறு எவித்” என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்த கலைஞர்களுக்காக, அந்தத் தொடரின் தயாரிப்பாளரால் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தாக இருக்கலாம் என கூறப்பட்டது. இந்தத் தகவல் பிரபல நடிகை நில்மினி தென்னகோனால் பகிரப்பட்டதாகும்.
மேலும், நடிகை நில்மினி தென்னகோனின் சமூகவலைதள பக்கங்களை ஆராய்ந்ததில், கடந்த மே மாதம் 12 ஆம் திகதி அவரால் பதிவேற்றப்பட்ட காணொளியில் அதே காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அக் காணொளி பதிவில் “சிகுறு எவித்” மற்றும் “சித நிதி நெ” ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்த கலைஞர்களுடன் நடத்தப்பட்ட வெசாக் அன்னதானம் நிகழ்வுக்குப் பின்னரான கொண்டாட்ட காட்சிகள்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆகவே, மாலினி பொன்சேகாவின் இறுதிக்கிரியையில் கலந்து கொண்ட சில நடிகர்கள் மாலினி பொன்சேகாவின் இல்லத்தில் பாடல்கள் பாடி, நடனமாடுவதாக சமூகவலைதளங்களில் பகிரப்படும் காணொளி கடந்த மே மதம் 12 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வொன்றில் எடுக்கப்பட்ட காணொளி என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.