பங்களாதேஷ் போராட்டம் என பகிரப்படும் இலங்கையின் ‘அரகலய’ புகைப்படங்கள்

இந்தப் புகைப்படங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற 'அரகலய' போராட்டத்தின் போது எடுக்கப்பட்டவையாகும்.
by Anonymous |
ஆகஸ்ட் 6, 2024

பங்களாதேஷ் அரசின் தொழில் கோட்டா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூலை மாதம் அந்நாட்டு மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறியுள்ள நிலையில் பங்களாதேஷில் அமைதியின்மை நிலவுகின்றது.
இந்தப் போராட்டங்களை அடுத்து, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதுடன் டாக்கா அரண்மனையை விட்டு பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளதாகவும், தற்போது அந்நாட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், அந்நாட்டு மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்தின் போது எடுக்கப்பட்ட பல்வேறு புகைப்படங்கள், காணொளிகள் தற்பொழுது சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பகிரப்பட்டு வருவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
எனினும், கடந்த 2022ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட ‘அரகலய’ போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகையை பொதுமக்கள் சுற்றிவளைத்த வேளையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களே தற்போது பங்களாதேஷ் நாட்டில் ஏற்பட்ட கலவரத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் என அந்நாட்டு ஊடகங்களிலும், Youtube, Facebook கணக்குகள், tiktok, Instagram மற்றும் X பக்கங்களில் வேகமாக பகிரப்படுகின்றன.
எனினும் இவ்வாறு பகிரப்படும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற ‘அரகலய’ போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்டவை என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.