நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

மாவதகம குழந்தையின் வீடியோ என்று கூறப்படும் இந்த வீடியோ, கடந்த மே மாதம் 2025 இல் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்ட காணொளியொன்றின் பதிவாகும்.
by Anonymous |
ஜூலை 23, 2025

அண்மையில் குருநாகல் மாவட்டத்தில், மாவதகம, பரகஹதெனிய, சிங்கபுர வீதியில் உள்ள ஒரு நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட நிலையில் ஒரு பெண் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த சம்பவம், சமூக வலைதளங்களில் பேசுபொருளாகவும் அதேபோல் பிரதான ஊடகங்களிலும் செய்தியாக பகிரப்பட்டு வருகின்றது.
இந்தக் குழந்தையின் தாயைக் கண்டுபிடிக்க பொலிசார் விசாரணைகளைத் தொடங்கியிருந்தாலும், இதுவரை குழந்தையின் தாயார் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர். எனினும் சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு காணொளியில், குழந்தையின் தாயாரை பொலிசார் விசாரித்துள்ளதாக பதிவிடப்பட்டுள்ள போதிலும் அது இந்த குழந்தையுடன் தொடர்புடைய சம்பவம் அல்ல என்பதை factseeker இனால் உறுதிப்படுத்த முடிந்தது, மற்றும் அந்த சம்பவமானது 2023 ஆம் ஆண்டு கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு செல்லும் “மீனகயா” இரவு அஞ்சல் புகையிரத கழிப்பறையில் வீசப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் தாயாரின் வாக்குமூலம் அது என்பது தெரியவந்தது.
இதற்கிடையில், கண்டுபிடிக்கப்பட்ட குழந்தையென பல வீடியோக்கள் மற்றும் பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படுவதையும் factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
இந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகளின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்த்ததில், மாவதகம குழந்தையின் வீடியோ என்று கூறப்படும் இந்த வீடியோ, கடந்த மே மாதம் 2025 இல் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்ட காணொளியொன்றின் பதிவுகள் என்பதை கண்டறிய முடிந்தது.
மேலும், இந்த வீடியோ முதலில் IHAAN💖 AIZEL என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டமையையும் அவதானிக்க முடிந்தது. அந்தக் காணொளி கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சில பயனர்கள் சமூக வலைதளங்களில் குறிப்புகளைச் சேர்த்துள்ளனர்.
ஆகவே, மாவதகம, பரகஹதெனிய, சிங்கபுர வீதியில் உள்ள ஒரு நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட நிலையில் ஒரு பெண் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் அந்தக் குழந்தையின் வீடியோ அல்ல என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.