நிஹால் அபேசிங்க மது போதையில் தனது வாகனத்தை பாராளுமன்ற குளத்தில் கவிழ்த்தாரா?

மோசமான வானிலை காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாகவும் இவ்விபத்து இடம்பெற்ற சமயத்தில் தான் இருக்கவில்லை எனவும் நிஹால் அபேசிங்க தெரிவித்தார்.
by Anonymous |
டிசம்பர் 2, 2024

“தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மது போதையில் தனது வாகனத்தை பாராளுமன்ற குளத்தில் கவிழ்த்தார்” என்ற பதிவுகளுடன் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
இது தொடர்பான பதிவுகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுவதால் FacSeeker இது குறித்து ஆராய்ந்தது.
இது தொடர்பில் பாராளுமன்ற ஊடகப்பிரிவினரிடம் FactSeeker வினவிய போது, கடந்த நவம்பர் 26 ஆம் திகதி ஏற்பட்ட மோசமான காலநிலை காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாகவும் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் அபேசிங்கவின் வாகனமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியதாகவும் தெரிவித்தனர். விபத்து இடம்பெற்ற நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் வாகனத்தில் இருக்கவில்லை எனவும் அவர் மது போதையில் இருந்ததாக தகவல்கள் எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.
மேலும், இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் அபேசிங்கவிடம் FactSeeker வினவிய போது, சம்பவம் இடம்பெற்ற சமயத்தில் தான் அங்கு இல்லை என்றும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட புகைமூட்டத்தால் இவ்விபத்து ஏற்பட்டதாகவும் தான் மது போதையில் இருந்ததாக பரவிவரும் செய்திகள் போலியானவை என்றும் தெரிவித்தார்.
இது குறித்து பிரதான ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டிருந்தன.
ஆகவே,”தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மது போதையில் தனது வாகனத்தை பாராளுமன்ற குளத்தில் கவிழ்த்தார்” என சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட பதிவுகள் போலியானவை என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.