நிபந்தனையின் பெயரிலேயே அஜித் நிவார்ட் கப்ரால் விடுதலை செய்யப்பட்டார்.

அஜித் நிவார்ட் கப்ரால் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளார். மூன்று மாதங்களுக்குள் ரூ. 1.84 பில்லியன் தொகையை அவர் இழப்பீடாக செலுத்த வேண்டும்.
by Anonymous |
டிசம்பர் 12, 2025

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகள், கிரேக்க பிணைமுறி தொடர்பான வழக்கில் இருந்து ‘விடுவித்து விடுதலை’ செய்யப்பட்டதாக செய்திகள் சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவுகள் :

அதேபோல், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் இது குறித்து வெளியிட்டுள்ள காணொளியொன்றும் பிரதான செய்தி இணையதளங்களில் பகிரப்பட்டிருந்தன. அந்தக் காணொளியில் அஜித் நிவார்ட் கப்ரால் கூறுகையில், ” மேல் நீதிமன்றத்தினால் தான் ‘விடுவித்து விடுதலை‘ செய்யப்பட்டதாக” தெரிவித்துள்ளார்.
link :- https://youtu.be/_87SDj-q9hk?si=zuqlSckV9cUTcEEr
எனினும், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் அஜித் நிவார்ட் கப்ரால் ‘விடுவித்து விடுதலை’ செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளதுடன், இவ்வாறு பகிரப்படும் செய்தி உண்மையல்ல எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
பதிவு –

ஆகவே இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்புக்கும் – ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பகிரப்படும் செய்திகளுக்கும் இடையே மாறுபட்ட தன்மை காணப்படுகின்ற காரணத்தினால் factseeker இதன் உண்மைத்தன்மையை ஆராய தீர்மானித்தது.
அதற்கமைய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட நால்வரின் மீதான வழக்கு மற்றும் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து factseeker கவனம் செலுத்தியது.
கிரேக்கம் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்தபோதும், கிரேக்க அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட பிணை முறிகளை கொள்வனவு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு ரூ.184 மில்லியனுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியதாக முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், முன்னாள் பிரதி ஆளுநர் தர்மசேன தீரசிங்க, உதவி ஆளுநர்கள் தொன் வசந்த ஆனந்த சில்வா மற்றும் எம்.ஏ. கருணாரத்ன ஆகியோர் மீது இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழு இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கு நேற்று முன்தினம் ( 10) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹம்மட் மிஹால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை திரும்பப் பெறுவதாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விடயங்களை முன்வைத்து, குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, கிரேக்க அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட பிணை முறிகளை கொள்வனவு செய்ததன் மூலம் அரசாங்கம் இழந்த ரூ. 184 மில்லியன் அபராதத்தை நீதிமன்றத்திற்கு செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், குற்றம் சாட்டப்பட்ட மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலை வழக்கில் இருந்து விடுவிக்குமாறு கோரியது.
குற்றம் சாட்டப்பட்ட அஜித் நிவாட் கப்ரால் சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி டிலான் ரத்நாயக்க இதற்கு ஆட்சேபனை தெரிவித்தார். அப்போது, ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 67 ஆம் அத்தியாயத்தின் கீழ், அந்த வழக்கில் முதல் பிரதிவாதியை வழக்கில் இருந்து விடுவிக்கலாம் என ஆணைக் குழு அறிவித்தது.
எனினும் ஏனைய பிரதிவாதிகளை குற்றவியல் நடைமுறை சட்டக் கோவையின் 194 (3) ஆம் அத்தியாயத்தின் கீழ் ‘ விடுவித்து ‘ விடுவிக்குமாறு ஆணைக்குழு கோரியது.
இந்த நிலையிலேயே விடயங்களை கருத்தில் கொண்ட நீதிபதி, ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 67 இன் கீழ் முதல் பிரதிவாதியான முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலை வழக்கில் இருந்து நிபந்தனையுடன் விடுவித்தார். அதே நேரத்தில் முன்னாள் பிரதி ஆளுநர் தர்மசேன தீரசிங்க, உதவி ஆளுநர்கள் தொன் வசந்த ஆனந்த சில்வா மற்றும் எம்.ஏ. கருணாரத்ன ஆகியோர் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 194 (3) இன் கீழ் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட்டு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
ஆகவே நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் நிபந்தனையுடனேயே விடுவிக்கப்பட்டுள்ளார்.
நிபந்தனைகள் என்ன ?
எதிர்வரும் 3 மாதங்களுக்குள் அஜித் நிவாட் கப்ரால் 1,843,267,595.65 ரூபாவை செலுத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதனை செலுத்த தவறினால் மூன்று மாதங்களின் பின்னர் இதே குற்றப் பத்திரைகையில் உள்ள குற்றச்சாட்டு தொடர்பில் அவருக்கு எதிராக வழக்கை முன்னெடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 67 இன் கீழ் கூறுவது என்ன என்பதை factseeker ஆராய்ந்தது.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 67 ஆனது , தீர்ப்புக்கு முன் குற்றப்பத்திரிகைகளைத் திரும்பப் பெற அனுமதிக்கிறது. இதன்போது இழப்பீடு, பகிரங்க மன்னிப்பு, பொறுப்புக்கூறல் மற்றும் அதிகாரப் பதவியில் இருந்து வாழ்நாள் முழுவதும் தகுதி நீக்கம் போன்ற நிபந்தனைகளுக்கு உட்பட்ட ஒரு கட்டமைக்கப்பட்ட மற்றும் நிபந்தனையுடன் கூடிய வழிமுறையாகும்.

இது குறித்து முன்னாள் நீதி அமைச்சர் அலி சபரி தனது X பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அதில் அவர் இந்த தீர்ப்பு குறித்த விளக்கத்தையும் முன்வைத்துள்ளார்.
Link :- https://x.com/alisabrypc/status/1998752256980832640?s=20
ஆகவே நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய அஜித் நிவாட் கப்ரால் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பதுடன், எதிர்வரும் 3 மாதங்களுக்குள் அஜித் நிவாட் கப்ரால் 1,843,267,595.65 ரூபாவை செலுத்த வேண்டும் என்பதே உண்மையான செய்தியாகும்.
எனினும் அஜித் நிவாட் கப்ரால் தான் வெளியிட்டுள்ள காணொளியில் இந்த தரவுகளை கூறாது, தான் ‘விடுவித்து விடுதலை’ செய்யப்பட்டதாக கூறுவது தவறாக கருத்தாகும்.

அதேபோல் அஜித் நிவாட் கப்ரால் ‘விடுவித்து விடுதலை ‘என சமூக வலைதளங்களிலும் பகிரப்படும் செய்தியானது உண்மைக்கு புறம்பானது என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.