தேசிய மக்கள் சக்தியின் உத்தேச அமைச்சரவை என போலிச்செய்தி
தற்போது பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் புகைப்படங்களும் இப்பட்டியலில் உள்ளன.
by Anonymous |
செப்டம்பர் 3, 2024
தேசிய மக்கள் சக்தியின் உத்தேச அமைச்சரவை இதுவென கூறும் 18 பேரின் புகைப்படங்களுடன் பதிவொன்று சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
அப்பதிவில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் இவ்வாறான அமைச்சரவையை தான் அமைப்பதாக ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் புகைப்படங்களும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளதுடன், சமூக வலைதளங்களில் இது அதிகளவில் பகிரப்பட்டும் உள்ளது.
ஆகவே இதன் உண்மைத்தன்மை குறித்து factseeker ஆராய்ந்து பார்த்ததில், இது போலியாக உருவாக்கப்பட்ட ஒரு புகைப்படம் என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
இது தொடர்பான பதிவுகள் தேசிய மக்கள் சக்தியின் உத்தியோகபூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளதா என ஆராய்ந்ததில் அவ்வாறான பதிவுகள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பதை அறிய முடிந்தது.
மேலும், இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் செயற்பாட்டாளர்களான வசந்த சமரசிங்க மற்றும் பிமல் ரத்நாயக்க ஆகியோரிடம் factseeker வினவிய போது, இதுவரையில் அவ்வாறான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் தற்போது ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதால் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரை ஜனாதிபதியாக்கும் நோக்கில் மாத்திரமே செயற்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் தேசிய பத்திரிகைகளில் இது தொடர்பான செய்திகள் எதுவும் வெளியிடப்பட்டுள்ளதா என ஆராய்ந்ததில் அவ்வாறான செய்திகள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பதை அறியமுடிந்தது.
ஆகவே, தேசிய மக்கள் சக்தியின் உத்தேச அமைச்சரவை இதுவென கூறும் புகைப்படத்துடனான பதிவுகள் போலியானவை என்பதை factseeker உறுதிப்படுத்துகிறது.