ஜனாதிபதியின் ஊடக சந்திப்பின் போது தேசியக் கொடியின் நிறம் மாற்றப்பட்டுள்ளதா?

ஜனாதிபதி ஊடக சந்திப்பில் தேசியக் கொடி நிறம் மாறவில்லை. நேரலை ஒளிபரப்பின் போது ஏற்பட்ட கேமரா தொழில்நுட்பக் கோளாறு மற்றும் ஒளி அமைப்புக் குறைபாடுகளாலேயே நிறம் சிவப்பாகத் தோற்றமளித்தது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
by Anonymous |
மார்ச் 20, 2026

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கடந்த ( 17.03.2026 ) நடத்திய ஊடக சந்திப்பின் போது, மேசையில் வைக்கப்பட்டிருந்த இலங்கையின் தேசியக் கொடியின் நிறம் மாறியுள்ளதாக ஊடகவியலாளர் அருண் பிரசாத் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். நேரலை வீடியோவில் கொடி சிவப்பாகத் தெரிவதாகவும், ஆனால் ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) அனுப்பிய புகைப்படத்தில் சிவப்பு மற்றும் மஞ்சள் (குங்குமப்பூ நிறம்) நிறங்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது,

factseeker இன் ஆய்வு :
இந்த “நிற மாற்றத்திற்கு” பின்னால் உள்ள உண்மையை கண்டறிய, நேரலை வீடியோ, அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப காரணிகளை factseeker ஆய்வு செய்தது.
1. காட்சி முரண்பாடு
நேரலை வீடியோவின் (Live Video) ஸ்கிரீன்ஷாட்டில், கொடியின் இடதுபுறம் உள்ள செங்குத்துப் பட்டைகள் (செம்மஞ்சள் மற்றும் பச்சை) மிக இருண்டதாகத் தெரிகின்றன. இது பின்னணியில் உள்ள கருஞ்சிவப்பு (Maroon) நிறத்துடன் கலந்துவிட்டதால், கொடி ஒற்றை நிறமாக இருப்பது போன்ற மாயையை ஏற்படுத்துகிறது.
2. அதிகாரப்பூர்வ புகைப்படம்
ஆனால், ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) வெளியிட்ட உயர்தரப் புகைப்படத்தில், தேசியக் கொடியின் நிறங்கள் (செம்மஞ்சள், பச்சை, கருஞ்சிவப்பு) எவ்வித மாற்றமுமின்றி மிகத் தெளிவாகவும் துல்லியமாகவும் இருப்பதை உறுதிப்படுத்த முடிகிறது.

3. தொழில்நுட்ப விளக்கம்: நிறம் மாறியது ஏன்?
நிஜத்தில் கொடி மாறவில்லை; மாறாக நாம் பார்க்கும் டிஜிட்டல் திரையில் சில தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன:
ஒளி அமைப்பு மற்றும் வைட் பேலன்ஸ் (White Balance): ஊடக சந்திப்பு நடைபெறும் இடத்தில் பயன்படுத்தப்படும் மின் விளக்குகளின் நிற வெப்பநிலைக்கு (Color Temperature) ஏற்ப கமராவின் ‘வைட் பேலன்ஸ்’ சரியாக அமையாவிட்டால், செம்மஞ்சள் போன்ற நிறங்கள் சிவப்பாகவோ அல்லது கரும்பழுப்பு நிறமாகவோ தெரிய வாய்ப்புண்டு.
லைவ் மிக்சர் மற்றும் கம்ப்ரஷன் (Video Compression): நேரலை ஒளிபரப்பின் போது தரவுச் சேமிப்பிற்காக வீடியோக்கள் சுருக்கப்படும் (Compression). அப்போது ஒத்த நிறங்களுக்கு இடையிலான வேறுபாடுகளை கேமரா அல்லது மிக்சர் சரியாகப் பிரித்துக் காட்ட முடியாமல் போவதால், நிறங்கள் ஒன்றோடொன்று கலந்தது போல் தோன்றும்.
முடிவு
ஜனாதிபதியின் ஊடக சந்திப்பில் பயன்படுத்தப்பட்ட தேசியக் கொடியிலோ அல்லது அதன் நிறத்திலோ எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. நேரலை வீடியோவில் தெரிந்த நிற மாற்றம் என்பது கேமரா அமைப்புகள், ஒளிப்பதிவு நுட்பம் அல்லது வீடியோ மிக்சரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு (Technical Glitch) மட்டுமே. ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட புகைப்படமே அங்குள்ள நிஜமான சூழலைப் பிரதிபலிக்கிறது.

FactSeeker குறிப்பு: ஒரு தேசிய அடையாளத்தைப் பற்றி முடிவெடுப்பதற்கு முன், நாம் பார்க்கும் டிஜிட்டல் சாதனங்களின் தொழில்நுட்ப வரம்புகளையும் கருத்தில் கொள்வது அவசியம். டிஜிட்டல் திரைகள் / தொழிநுட்பம் சில நேரங்களில் உண்மையை மறைக்கலாம், ஆனால் ஆதாரங்கள் உண்மையை உறுதிப்படுத்தும்.