ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பது எப்படி?

வாக்காளர்களை தவறாக வழிநடத்தும் விதமான பதிவுகள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன.
by Anonymous |
செப்டம்பர் 16, 2024

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளரை வெற்றி பெற வைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இம்முறைத் தேர்தலில் வாக்களிக்கும் முறை குறித்த அறிவுறுத்தல்களை வழங்கும் சமூக வலைதள பதிவொன்றை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
இப்பதிவானது வாக்காளர்களை தவறாக வழிநடத்தும் வகையில் இருப்பதனால் factseeker இது குறித்து வாசகர்களுக்கு தெளிவை ஏற்படுத்தும் விதமாக அவதானம் செலுத்துகின்றது.
சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவில்,
“சஜித்துக்கு மூன்று விருப்பு வாக்குகளையும் பின்வருமாறு வழங்கலாம்,
முதல் விருப்பு வாக்கு ☎ 1
இரண்டாம் விருப்பு வாக்கு ☎1 2
மூன்றாம் விருப்பு வாக்கு ☎ 1 2 3
முதல் வாக்கு சஜித்துக்கு என்றால் 1
முதல் மற்றும் இரண்டாம் வாக்கு சஜித்துக்கு என்றால் 1 2
மூன்று வாக்குகளும் சஜித்துக்கு என்றால் 1 2 3
வாக்குகளை அதிகரிப்போம் – சஜித்தை ஜனாதிபதி ஆக்குவோம்.” என்பதே அப் பதிவாகும்.
இங்கு குறிப்பிட்டுள்ளதன் படி ஒரே வேட்பாளருக்கு இரண்டு வாக்குகளையும் விருப்பு வாக்குகளையும் வழங்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது வாக்காளர்களை தவறாக வழிநடத்துவதால் சரியாக வாக்களிக்கும் முறை பற்றி factseeker இங்கே பதிவு செய்கின்றது.
சரியான வாக்களிக்கும் முறை
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல் மற்றும் 1981 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் பிரகாரம் வாக்களிக்கும் முறை பின்வருமாறு.
• ஒரு வாக்காளர் ஒரு வேட்பாளருக்கு மட்டுமே வாக்களிக்க விரும்பினால் 1 என்ற எண்ணைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்.
• கூடுதலாக, புள்ளடியை (x) ஐப் பயன்படுத்தியும் வாக்களிக்க முடியும், அதுவும் செல்லுபடியான வாக்காக ஏற்றுக்கொள்ளப்படும்.
• மூன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடும் போது, ஒரு வேட்பாளருக்கு முதல் வாக்கைக் செலுத்தலாம் மற்றும் ஏனைய இரண்டு வேட்பாளர்களுக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளை செலுத்தலாம்.
இதன் படி, நாம் வாக்களிக்க விரும்பும் முதல் வாக்காளருக்கு 1 என்ற எண்ணை பயன்படுத்தி வாக்களிக்க முடியும். மேலும் இரண்டு வேட்பாளர்களுக்கு தங்கள் விருப்பு வாக்குகளை வழங்க விரும்பினால் 2 , 3 என்ற எண்ணை பயன்படுத்தி அவர்களுக்கு வாக்களிக்க முடியும். மேலும் புள்ளடியை (X) பயன்படுத்தி ஒருவருக்கு மாத்திரம் வாக்களிக்க முடியும்.
இது தவிர, வேறு எந்த முறையிலும் வாக்களிக்க முயன்றால் அவ்வாக்குகள் செல்லுபடியற்ற வாக்குகளாக அமையும். அவ்வாறான முறைகள் சில,
• எந்த வேட்பாளருக்கும் வாக்குகள் செலுத்தப்படாத போது
• ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்களுக்கு வாக்குகள் குறிக்கப்படும் போது. (எண் 1 அல்லது புள்ளடி என்பன பல இடங்களில் குறிக்கப்படும் போது)
• எண் 1 மற்றும் புள்ளடி இரண்டும் குறிக்கப்படும் போது
• இரண்டாவது அல்லது மூன்றாவது விருப்பு வாக்கு மட்டும் வழங்கும் போது.
• வாக்காளர் பெயர் அல்லது தொலைபேசி எண் போன்ற அடையாளம் காணக்கூடிய ஏதாவது காகிதத்தில் எழுதப்பட்டிருக்கும் போது
• 1 , 2 , 3 க்கு மேல் வாக்குகள் மற்றும் விருப்பு வாக்குகள் குறிக்கப்படும் போது.
இது குறித்து தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க factseeker இடம் தெரிவிக்கையில், சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட இந்த பதிவானது வாக்காளர்களை தவறாக வழிநடத்தும் பதிவு என அவர் தெரிவித்தார். மேலும் வாக்களிக்கும் முறை குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அவ்வப்போது மக்களுக்கு அறிவித்து வருவதாகவும், அது தொடர்பில் வாக்காளர்கள் விழிப்புடன் இருப்பது அவசியமானது என்றும் தெரிவித்தார்.
ஆகவே,”சஜித்துக்கு மூன்று விருப்பு வாக்குகளையும் வழங்கலாம்” என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவானது வாக்காளர்களை தவறாக வழிநடத்தட்டும் பதிவு என்பதை factseeker சுட்டிக்காட்டுகின்றது.