கலிபோர்னியா காட்டுத்தீ பரவலில் பாதிக்கப்படாத ஒரே ஒரு வீடு என பகிரப்படும் தவறான புகைப்படம்

கலிபோர்னியாவின் லொஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்படாத ஒரே ஒரு வீடு என்ற பதிவுகளுடன் சமூகவலைதளங்களில் பகிரப்படுகின்ற புகைப்படம் 2023 இல் ஹவாயில் ஏற்பட்ட காட்டுத்தீயுடன் தொடர்புடைய புகைப்படம் ஆகும்.
by Anonymous |
ஜனவரி 20, 2025

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ பரவலை அடுத்து இந்த சம்பவம் உலக அளவில் பேசும்பொருளாக மாறியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு பதிவுகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கலிபோர்னியாவின் லொஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட காட்டுத்தீ பரவலில் பாதிக்கப்படாத ஒரே ஒரு வீடு என்ற பதிவுகளுடன் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.

அந்த வீட்டின் உரிமையாளர் ஒரு இறை பக்தர் என்பதால் அவரது வீடு விபத்தில் இருந்து பாதுகாக்கப்பட்டதாக சில பதிவுகளில் குறிப்பிடப்பட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது. இவை சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுவதால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.
இப் புகைப்படத்தை ஆராய்ந்ததில் இது ஹவாயில் உள்ள லஹைனா நகரில் ஏற்பட்ட தீவிபத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதை அறிய முடிந்தது. மேலும், இது தொடர்பில் CBS செய்தி தளத்தில் வெளியாகிய செய்தி ஒன்றையும் அவதானிக்க முடிந்தது.
https://www.cbsnews.com/news/lahaina-wildfire-see-the-nearly-100-year-old-miracle-house-that-survived/

ஆகவே, கலிபோர்னியாவின் லொஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்படாத ஒரே ஒரு வீடு என்ற பதிவுகளுடன் சமூகவலைதளங்களில் பகிரப்படுகின்ற புகைப்படம் 2023 இல் ஹவாயில் ஏற்பட்ட காட்டுத்தீயுடன் தொடர்புடைய புகைப்படம் என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.
 
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                            