‘ஒவ்வொரு முஸ்லிம் தாயின் வயிற்றிலும் பயங்கரவாதம் வளர்கிறது’ என அநுர தெரிவித்தாரா?
தான் கூறியதாக பொதுவெளியில் பொய் பிரசாரம் செய்தமைக்காக மு.கா. தலைவர் ரவூப் ஹகீமிடம் 2 பில்லியன் ரூபா நட்டஈடு கோரி அநுரகுமார கடிதம் அனுப்பியுள்ளார்.
by Anonymous |
ஆகஸ்ட் 24, 2024
‘ ஒவ்வொரு முஸ்லிம் தாயின் வயிற்றிலும் பயங்கரவாதம் வளர்கிறது’ என பாராளுமன்றத்தில் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹகீம் தெரிவித்த கருத்து தற்பொழுது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க ஆகியோர் முஸ்லிம் சமூகத்தை விமர்சித்து பேசியதாக சமூக வலைதளங்களில் காணொளியொன்று பகிரப்பட்டு வருகின்ற நிலையில், அந்தக் காணொளியை அடிப்படையாக வைத்தே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹகீம் இவ்வாறான கருத்தொன்றை கடந்த 19 ஆம் திகதி காத்தான்குடியில் தெரிவித்திருந்தார்.
இது குறித்து factseeker ஆராய்ந்து பார்த்ததில், அநுரகுமார தெரிவித்ததாக தற்போது ரவூப் ஹகீம் கூறும் அல்லது தற்போது பகிரப்பட்டு வரும் அநுரகுமார திஸாநாயக்கவின் பாராளுமன்ற உரையின் பகுதியானது, கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் பாராளுமன்றத்தில் அவரால் நிகழ்த்தப்பட்ட உரையாகும். அந்த உரையானது சுமார் 28 நிமிடங்கள் வரை நீண்டது.
LINK : https://www.youtube.com/watch?v=ZVXyQ-zu-zw
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட நிலைமையை மையப்படுத்தி, நடைபெற்ற பாராளுமன்ற விவாதத்தின் போது அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்த கருத்துக்களில் முஸ்லிம் அடிப்படைவாதம் தொடர்பில் உரையாற்றுகின்றார்.
( அவரது முழுமையான உரையின் ஹன்சார்ட் அறிக்கையின் சிங்கள பிரதி இணைக்கப்பட்டுள்ளது)
ஹன்சாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள அவரது உரையின் குறித்த பகுதியின் தமிழ் மொழியாக்கத்தை இங்கு பதிவிடுகின்றோம்.
‘ தமிழர் தரப்பை நிராகரித்து அவர்களை இந்தப் பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றியதன் விளைவு இறுதியில் விடுதலைப்புலிகளில் வந்து முடிந்தது. அதே தவறை நாம் இப்போது செய்யவேண்டுமா? இப்போது முஸ்லிம் சமூகத்தையும் அந்த இடத்தை நோக்கி வழிநடத்த வேண்டுமா?
முஸ்லிம் தலைவர்கள் மூலமாகவே இதனைத் தடுக்க வேண்டும். முஸ்லிம் சமூகம் அதற்கு இடமளிக்க வேண்டாம். முஸ்லிம் சமூகத்துக்குள் தான் இந்த அடிப்படைவாதக் குழுக்கள் உருவாக்கப்படுகின்றன. அழிவுமிகு முஸ்லிம் தீவிரவாதம் முஸ்லிம் சமூகம் என்ற கருவறைக்குள்ளே இருந்து தான் உருவாகின்றது. முஸ்லிம் கலாசாரத்திற்குள்ளே தான் இது வளர்ச்சி அடைகின்றது. கடைசியில் அதே சமூகத்திற்குள் தான் ஒளிந்தும் கொள்கிறது. எனவே இதனை வளர்ப்பதா அல்லது அழிப்பதா என்பதை முஸ்லிம் மக்களே தீர்மானிக்க வேண்டும்.
விவகாரமான அல்லது நச்சுத்தன்மை வாய்ந்த கட்டியை வளர்ப்பதா அல்லது அழிப்பதா என்பதை முஸ்லிம் மக்கள் தீர்மானிக்க வேண்டும். பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலமாகவோ அல்லது பொதுமக்கள் தலையீட்டினாலோ மாத்திரம் அதை இல்லாமல் செய்ய முடியாது. அந்த கர்ப்பப்பையை உருவாக்கிய தரப்பினர் முன்வந்தால் மாத்திரமே அதனை அழிக்க முடியும். கர்ப்பப்பை இல்லாமல் செய்யுமாறு நான் ஒருபோதும் முன்மொழியவில்லை. ஆனால் அந்த கர்ப்பப்பையில் உள்ள அந்த விவகாரமான அல்லது நச்சுத்தன்மை வாய்ந்த கட்டியை இல்லாமல் செய்யுமாறே கூறுகிறேன். இதனை முஸ்லிம் சமூகமும் முஸ்லிம் தலைவர்களும் புரிந்துகொள்ளவேண்டும்.
இந்த நச்சுத்தன்மை கொண்ட கட்டியை வளர்ப்பதா? அதனை போசிப்பதா? அதற்கு போசணை கொண்ட ஆகாரங்களை வழங்குவதா? அல்லது அதனை அழிப்பதா? இதற்காக முஸ்லிம் சமூகம் முன்வரவில்லையெனில் இந்த விவகாரமான அல்லது நச்சுத்தன்மை கொண்ட கட்டியை சமூகத்திலிருந்து அழிக்க முடியாமல் போகும்.
இந்த நச்சுத்தன்மை கொண்ட கட்டியை இல்லாமல் செய்யும் பாரிய பொறுப்பு முஸ்லிம் சமூகத்துக்கு உள்ளது என நான் நம்புகிறேன்.ஆகவே நீங்களே இதற்கு தீர்வைக் கூறுங்கள். பொது சமூகமாக நாம் அனைவரும் என்ன செய்யவேண்டும்? இன்று எதுவுமே நியாயமான செயற்பாடுகள் அல்ல. ஒருபுறம் சிங்கள இனவாதம்…’ என அநுரகுமாரவின் உரை தொடர்கின்றது.
இந் நிலையில் மு.கா. தலைவர் ரவூப் ஹகீம், ‘ ஒவ்வொரு முஸ்லிம் தாயின் வயிற்றிலும் பயங்கரவாதம் வளர்கிறது’ என பாராளுமன்றத்தில் அநுரகுமார திஸாநாயக்க பேசியதாக குறிப்பிட்ட விடயம் தொடர்பில் கம்பளையில், தர்கா நகரில் நடந்த தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் அநுரகுமார திஸாநாயக்கவும் பதிலளித்துள்ளார்.
https://x.com/yasas101/status/1826343824832299203?s=46&t=7p4CLXtAH44oQQ-dqagsCg
இதன்போது, ரவூப் ஹகீமுக்கு தான் கூறிய சிங்களம் விளங்காவிட்டால் அவர் நீதிமன்றில் தெலிவை பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளதுடன், மீள இனவாதத்தை தூண்ட முயற்சிப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதனிடையே, தான் கூறியதாக பொதுவெளியில் பொய் பிரசாரம் செய்தமைக்காக மு.கா. தலைவர் ரவூப் ஹகீமிடம் 2 பில்லியன் ரூபா நட்டஈடு கோரி அநுரகுமார கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், சமூக வலைத்தள பதிவாளர் ஒருவருடனான நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட ரவூப் ஹகீம், தான் அநுரகுமாரவை விமர்சித்துவிட்டதாகவும், அதற்கு அளிக்கப்பட்டும் விளக்கங்களை தான் ஏற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
https://www.youtube.com/watch?v=SzHcANCdvb8
இந் நிலையில் அனைத்து சான்றுகள், விளக்கங்களை வைத்து பார்க்கும் போது ‘ ஒவ்வொரு முஸ்லிம் தாயின் வயிற்றிலும் பயங்கரவாதம் வளர்கிறது’ என பாராளுமன்றத்தில் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிடவில்லை எனவும், அவ்வாறு கூறியதாக ரவூப் ஹகீம் எம்.பி கூறியது பொய்யான விடயம் என்பதும் உறுதியாகின்றது.