‘ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்’ புத்தகத்துடன் மைத்திரி எடுத்துக்கொண்ட புகைப்படம் உண்மையே

சுனந்த தேசப்பிரியவின் x தள பக்கத்தி்லும் இப் புகைப்படம் பதிவேற்றப்பட்டிருப்பதையும் காணக்கூடியதாக இருந்தது .
by Anonymous |
அக்டோபர் 9, 2024

சிரேஷ்ட ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய எழுதிய ‘ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்’ என்ற புத்தகத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையில் வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
அவ்வாறு பகிரப்பட்டுள்ள பதிவுகளில், இது போலியான புகைப்படம் என்றும் திரிபுபடுத்தப்பட்ட (Edit) புகைப்படம் என்றும் பலர் கருத்துக்களை பதிவிட்டு வந்ததால் factseeker இது குறித்து ஆராய்ந்தது.

எனவே இப்புகைப்படத்தை சுனந்த தேசப்பிரிய அல்லது இப் புத்தகத்தின் வெளியீட்டு நிறுவனமான சயுர வெளியீடு அவர்களது சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்டுளார்களா என ஆராய்ந்ததில் சயுர வெளியீட்டாளர்கள் தமது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் இப் புகைப்படத்தை வெளியிட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது. மேலும், சுனந்த தேசப்பிரியவின் x தள பக்கத்தி்லும் இப் புகைப்படம் பதிவேற்றப்பட்டிருப்பதையும் காணக்கூடியதாக இருந்தது .

இப் புகைப்படம் குறித்து சயுர வெளியீட்டின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நிலந்த கமகேவிடம் factseeker வினவிய போது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியில் உள்ள சயுர வெளியீட்டு சாவடிக்குச் சென்று குறித்த புத்தகத்தை கொள்வனவு செய்ததாகவும், அங்கு பலரும் அதனை புகைப்படங்கள் எடுத்ததாகவும் அதில் ஒரு புகைப்படமே சமூக வலைதளங்களில் பரிமாறப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அலுவலகத்திடம் factseeker வினவிய போது, வாசகர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க ‘ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்’ என்ற புத்தகத்துடன் புகைப்படம் எடுத்து கொண்டார் எனவும் இது உண்மையான புகைப்படம் எனவும் தெரிவித்தனர்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியில் சயுர புத்தகச் சாவடிக்குச் சென்று ‘ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்’ புத்தகத்தை வாங்கியதைக் காட்டும் மேலும் சில புகைப்படங்களையும் அவதானிக்க முடிந்தது.

ஆகவே, கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியில் ‘ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்’ புத்தகத்தை வைத்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த புகைப்படம் உண்மையான புகைப்படம் என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.
 
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                                    