ஈரான் வான்வழித் தாக்குதல்கள் எனப் பகிரப்படும் பழைய காணொளி

2024 அக்டோபர் 1ஆம் திகதி ஈரான் இஸ்ரேலை குறிவைத்து மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலின் போது எடுக்கபட்ட பழைய காணொளியே இவ்வாறு பகிரப்படுகின்றது.
by Anonymous |
ஜூன் 16, 2025

இஸ்ரேலின் பாதுகாப்புப் படையான ஐடிஎஃப், கடந்த 13ஆம் திகதி ஈரான் நாட்டின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் இராணுவ தளங்களை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இது தொடர்பான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் பல சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்ற நிலையில், “Ada Derana Sinhala” x தள பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்த காணொளி ஒன்றை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
இஸ்ரேல் ஈரானில் தாக்குதல் நடத்திய போது எடுக்கப்பட்ட காணொளி என X தளத்தில் பகிரப்பட்ட பல காணொளிகளை இணைத்து “Ada Derana” வினால் வெளியிடப்பட்ட இக் காணொளி தயாரிக்கப்பட்டுள்ளது.
அந்த காணொளியில் இடம்பெற்ற ஒவ்வொரு காட்சியின் மூலத்தை FactSeeker ஆராய்ந்த போது, அதன் முதல் 16 செக்கன்களில் உள்ள காட்சி கடந்த 13 ஆம் திகதி ஈரானில் நிகழ்ந்த தாக்குதலுடன் தொடர்பற்றதை போன்று இருந்தது.
இக் காணொளியில் இடம்பெற்றுள்ள காட்சிகளை Google Lens மூலம் ஆராய்ந்ததில், அவை 2025 மே மாதம் இந்தியா-பாகிஸ்தான் தாக்குதலின் போது பதிவாகியதாகவும், 2024 ஒக்டோபர் மாதம் ஈரான்-இஸ்ரேல் தாக்குதலின் போது பதிவாகியதாகவும், இதற்கு முன்பே பல பதிவுகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது.
மேலும், இது குறித்து ஆராய்ந்த போது, இக் காணொளி தொடர்பாக French News Agency (AFP Middle East & North Africa) வெளியிட்ட உண்மை சரிப்பார்ப்பு கட்டுரையை அவதானிக்க முடிந்தது.
அக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்ததன் படி, “Ada Derana Sinhala” x தள பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த காணொளியின் முதல் 16 செக்கன்களில் உள்ள காட்சி 2024 அக்டோபர் 1ஆம் திகதி ஈரான் இஸ்ரேலை குறிவைத்து மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலின் போது எடுக்கப்பட்டதாகும்.
ஆகவே, “Ada Derana Sinhala” X தள பக்கத்தில், இஸ்ரேல் கடந்த 13ஆம் திகதி ஈரானில் விமான தாக்குதல் நடத்திய போது எடுத்ததாகக் கூறி பதிவிடப்பட்ட காணொளியில் இடம்பெற்ற முதல் காட்சி தவறானது என்பதையும் அக் காணொளி 2024 அக்டோபர் 1ஆம் திகதி ஈரான் இஸ்ரேலை குறிவைத்து மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலின் போது எடுக்கபட்ட காணொளி என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகிறது.