இலங்கையில் புதிய நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டதாக பகிரப்படும் போலிச்செய்தி
இலங்கையில் புதிதாக அச்சிடப்பட்ட நாணயத்தாள்கள் என பகிரப்படுகின்ற புகைப்படம், 2011 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணயத்தாள்கள் வைக்கப்பட்ட கோப்புறைகளின் (Folder) புகைப்படமாகும்.
by Anonymous |
ஜனவரி 17, 2025
இலங்கையில் புதிதாக அச்சிடப்பட்ட நாணயத்தாள்கள் என்ற பதிவுடன் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
அப் புகைப்படம் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்படுவதால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.
இலங்கையில் புதிதாக அச்சிடப்பட்ட நாணயத்தாள்கள் என்ற பதிவுடன் பகிரப்பட்ட அப் புகைப்படத்தை Google Reverse Image மூலம் ஆராய்ந்ததில் பல்வேறு இணையதளங்களில் இப் புகைப்படம் பதிவிட்டு இருப்பதை அவதானிக்க முடிந்தது. மேலும், இவை இலங்கை நாணயத்தாளின் உத்தியோகபூர்வ கோப்புறை (Folder) என குறிப்பிடப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிந்தது.
இது குறித்து இலங்கை மத்திய வங்கியின் நாணயத் திணைக்களத்திடம் FactSeeker வினவிய போது, இவை 2011 ஆம் ஆண்டு மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட உத்தியோகப்பூர்வ நாணயத்தாள்கள் வைக்கப்பட்ட கோப்புறைகள் (Folder) என்றும் இந் நாணயத்தாள் கோப்புகளை இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார வரலாற்று அருங்காட்சியகத்தில் கொள்வனவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர். மேலும், 2011 ஆம் ஆண்டு பெப்ரவரி 04 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட இலங்கையின் 11வது வர்த்தக நாணயத்தாள்கள் வைக்கப்பட்ட கோப்புறைகளே (Folder) இவ்வாறு பகிரப்படுகின்றன என்றும் தெரிவித்தனர்.
ஆகவே, இலங்கையில் புதிதாக அச்சிடப்பட்ட நாணயத்தாள்கள் என்ற பதிவுடன் சமூகவலைதளங்களில் பகிரப்படுகின்ற புகைப்படம் 2011 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணயத்தாள்கள் வைக்கப்பட்ட கோப்புறைகளின் (Folder) புகைப்படம் என்பதையும் அப் பதிவுகள் உண்மைக்கு புறம்பானவை என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகிறது.