இலங்கையின் நீர்வீழ்ச்சியொன்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கென தவறாக பகிரப்படும் காணொளி
இந்த சம்பவம் 2024 மே 17 ஆம் திகதி இந்தியாவின் பழைய குற்றாலம் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு என்பதையும், இது இலங்கையில் நடந்த சம்பவம் அல்ல என்பதையும் factseeker உறுதிப்படுத்துகின்றது
by Anonymous |
ஜூன் 5, 2024
தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக, நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அத்துடன் நீர்த் தேக்கங்கள் நிரம்பி வழிவதுடன் மக்களின் அன்றாட வாழ்க்கையும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சில தினங்களாக பெய்துவரும் கனமழை காரணமாக இலங்கையில் நீர்வீழ்ச்சியொன்றில் தண்ணர் பெருக்கெடுத்து ஓடுவது போன்ற காணொளியொன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
இலங்கையில் தற்போது நிலவும் மோசமான காலநிலை காரணமாக இந்த காணொளி இலங்கையில் இடம்பெற்ற சம்பவம் என்றே பலரும் கருதி, அதனை பகிர்ந்து வருவதால் அதன் உண்மைத்தன்மை குறித்து factseeker ஆராய்ந்து பார்த்தது.
குறித்த காணொளியில் இருக்கும் பொதுமக்கள், அந்தப் பிரதேசம் என்பன குறித்து உன்னிப்பாக அவதானித்ததில் இதில் இருப்பவர்கள் இலங்கையர்கள் அல்ல என்பதையும், இந்த பிரதேசம் இலங்கையில் உள்ளதொன்று அல்ல என்பதையும் கண்டறிய முடிந்தது. எனினும் இந்தக் காணொளியின் துல்லியத்தன்மையை ஆராய்ந்து பார்க்க Google Search any image with Lens மற்றும் InVID மூலம் ஆராய்ந்து பார்த்தபோது இது இந்தியாவில் இடம்பெற்ற சம்பவம் என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
இந்தியாவின் தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தில் உள்ள பழைய குற்றாலம் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் போது இந்த காணொளி பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இது குறித்து இந்திய ஊடகங்கள் செய்திகளையும் பிரசுரித்துள்ளன.
ஆகவே, இந்த சம்பவம் 2024 மே 17 ஆம் திகதி இந்தியாவின் பழைய குற்றாலம் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு என்பதையும், இது இலங்கையில் நடந்த சம்பவம் அல்ல என்பதையும் factseeker உறுதிப்படுத்துகின்றது.