இலங்கையின் சுற்றுலாத்துறை கடந்த ஆறு மாதங்களில் 3.7 பில்.டொலர்கள் வருமானத்தை ஈட்டவில்லை

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் இலங்கையின் சுற்றுலாத்துறை ஈட்டிய வருமானம் 1.7 பில்லியன் டொலர்கள் மட்டுமேயாகும்.
by Anonymous |
ஆகஸ்ட் 6, 2025

இந்த ஆண்டு இதுவரையில், இலங்கைக்கு 1.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும், இதன் மூலம் கடந்த 6 மாதங்களில் அரசாங்கம் 3.7 பில்லியன் டொலர்கள் வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருவதுடன் இது குறித்து விமர்சனங்களும் எழுந்துள்ளன.
“ஏற்கனவே 1.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். கடந்த 6 மாதங்களில் நாங்கள் 3.7 பில்லியன் டொலர் வருவாய் ஈட்டியுள்ளோம். (7 மாதங்களுக்கு) சுற்றுலாத் துறையிலிருந்து கடந்த 6 மாதங்களுக்கு 3.7 பில்லியன் டொலர்களை ஈட்டியுள்ளோம். அடுத்த 6 மாதங்களில் மேலும் 3.7 பில்லியன் டொலர்களை ஈட்ட முடியும்.” என நுவரெலியாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சீதை அம்மன் ஆலயத்தில் ஒரு புதிய தியான மண்டப திறப்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இதனை தெரிவித்திருந்தார்.
link :
இது குறித்து ஆராயும் விதமாக factseeker, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் மாதாந்த அறிக்கைகளை ஆய்வு செய்தபோது, இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 1.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்,
மேலும் அதிக சதவீத சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர் என்பதை உறுதிப்படுத்த முடிந்தது. எனவே அமைச்சர் கூறிய இந்த தரவுகள் உண்மையென உறுதிப்படுத்தப்பட்டது.
எனினும் 2025 ஆம் ஆண்டின் முதல் 6/7 மாதங்களுக்குள் இலங்கையின் சுற்றுலா வருவாயை FactSeeker ஆய்வு செய்தது.
இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் இலங்கையின் சுற்றுலாத்துறை ஈட்டிய வருமானமாக ( US$1,712.6) மில்லியன் அல்லது 1.7 பில்லியன் டொலர்கள் மட்டுமேயாகும்.
இலங்கை மத்திய வங்கியின் சுற்றுலா வருவாய்க்கான தரவு இங்கே,
இதுவரை, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையோ அல்லது இலங்கை மத்திய வங்கியோ ஜூலை மாதத்திற்கான சுற்றுலாத்துறை வருமானம் குறித்த உத்தியோகபூர்வ தரவு அறிக்கைகளை வெளியிடவில்லை.
இருப்பினும், வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டுள்ள தொகைக்கும் ஜூன் மாதத்திற்கான உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களுக்கும் இடையே 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வித்தியாசம் உள்ளது.
இந்நிலையில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க, மத்திய வங்கி அறிக்கைகளில் சேர்க்கப்பட்டுள்ள தரவு ஜூன் மாதம் வரை மட்டுமே உள்ளது எனவும், அந்த அறிக்கைகளின் படி, ஜூன் மாதம் வரை சுற்றுலாத் துறையின் வருவாய் 1.7 பில்லியன் டொலர்கள் என்றும் அவர் கூறினார். அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்ட தொகைக்கும் உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களுக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு இருப்பதாகவும், ஜூலை மாதத்திற்கு இவ்வளவு பெரிய வருமானம் கிடைக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்திருந்தார்.
பிரதி அமைச்சரின் அறிக்கை இங்கே.
இதற்கிடையில், நேற்று (05) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளின் முதல் 6 மாதங்களுக்கு சுற்றுலாத் துறை தொடர்பான வருவாயை அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். சுற்றுலா வருவாயில் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் கிடைத்துள்ளதாக அவர் உறுதிப்படுத்தினார்.
கூடுதலாக, வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்தின் அமைச்சின் கீழ் வரும் வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்து அனுப்பப்படும் பணம் குறித்த புள்ளிவிவரங்களையும் அவர் வழங்கினார், மேலும் அந்த தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுக்கு, அதாவது முதல் 2 காலாண்டுகளுக்கு “வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்து அனுப்பப்படும் பணம்” என 3.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்பட்டுள்ளன.
அமைச்சரவை ஊடகப் பேச்சாளரின் விளக்கம் இங்கே.
https://www.youtube.com/live/Jjz3C5zG5mo?feature=shared&t=3935
இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிவரங்களாலும் இந்தத் தரவு உறுதிப்படுத்தப்பட்டது. வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்து அனுப்பப்படும் பணம் குறித்த இலங்கை மத்திய வங்கியின் தரவு இங்கே.
அமைச்சர் விஜித ஹேரத் தனது பேஸ்புக் பக்கத்தில் சரியான தரவுகளைக் கொண்ட ஒரு பதிவை வெளியிட்டதையும் FactSeeker கவனித்தது.
அதன்படி, கடந்த 6 அல்லது 7 மாதங்களில் சுற்றுலாத் துறை 3.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானத்தை ஈட்டியுள்ளது என்ற வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்தின் அறிக்கை தவறானது என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.