இறந்த குழந்தை தொலைபேசியில் குறுஞ்செய்தி பார்ப்பதாக பரவும் போலிச்செய்தி
இந்தப் புகைப்படம் 2022ஆம் ஆண்டில் தாய்லாந்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.
by Anonymous |
ஜூன் 20, 2024
‘ காஸாவில் இறந்த குழந்தை கையடக்கத் தொலைபேசியில் குறுஞ்செய்தியை பார்க்கும் காட்சி’ என புகைப்படத்துடன் கூடிய செய்தியொன்று எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு வருவதை factseekerஇனால் அவதானிக்க முடிந்தது.
கடந்த ஆண்டு இஸ்ரேல் இராணுவத்திற்கும் பாலஸ்தீன போராளிகளுக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்ட யுத்தம் இன்றுவரை நீடித்து வருகின்ற நிலையில், காஸா பகுதியில் பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ள இந்த ஒரு புகைப்படத்தை பலரும் விமர்சித்து வருகின்ற நிலையில், இதன் உண்மைத்தன்மை குறித்து factseeker ஆராய்ந்து பார்த்தது.
அதற்கமைய, குறித்த புகைப்படத்தை google reverse image search மூலமாக ஆராய்ந்து பார்த்ததில் இது கடந்த 2022 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதை கண்டறிய முடிந்தது. அந்த ஆண்டில் இருந்தே பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.
மேலும், இந்த புகைப்படத்தை தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த Surattana Sawadkit என்பவர் கடந்த 2022ஆம் ஆண்டு தனது முகப்புத்தக பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி, ஹாலோவீன் (Halloween) மற்றும் சென்ட்ரல் கோரட் (Central Korat) போன்ற குறியீடுகளுடன் இந்தப்பதிவு காணப்படுகின்றது.
முடிவு:
ஆகவே, இந்த புகைப்படத்தையே தற்போது பலரும் காஸாவில் இறந்த குழந்தை தொலைபேசி பயன்படுத்தும் காட்சி எனக்கூறி பகிர்ந்து வருகின்றனர். எனினும் இந்தப் புகைப்படம் 2022ஆம் ஆண்டில் தாய்லாந்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.