‘இதயம்’ சின்னத்தில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றாரா ரணில் ?

இந்த சின்னமானது உலகில் அன்பின் சின்னம் மட்டுமே எனவும் அது உண்மையான இதயப் பிரதியல்ல எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்
by Anonymous |
ஆகஸ்ட் 2, 2024

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு, அது குறித்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் தம்மை ஆயத்தப்படுத்தி வருகின்ற நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்குகின்றார்.
இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்க “இதயம்” சின்னத்தில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக பிரதான இணையதளங்களில் செய்திகள் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன், சமூக வலைதளங்களிலும் அவ்வாறான பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.
ஆகவே , ஜனாதிபதி ரணில் “இதயம் ” சின்னத்தில் போட்டியிடுவதாக பகிரப்படும் செய்திகள் உண்மையா என factseeker ஆராய்ந்து பார்த்தது.
அதற்கமைய, இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவிடம் factseeker வினவிய போது, ஜனாதிபதித் தேர்தலுக்காக ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்படும் சின்னம் தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேட்சைக்குழுவோ ‘இதயம்’ சின்னத்தில் தம்மை பதிவு செய்துள்ளனரா என இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் factseeker வினவியது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, ‘இதயம்’ சின்னத்தின் கீழ் எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேட்சைக்குழுவோ பதிவு செய்யப்படவில்லை என்று குறிப்பிட்டார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, ’இதயம்’ சின்னத்தின் கீழ் அரசியல் கட்சியொன்றை பதிவு செய்ய விண்ணப்பித்திருந்ததாகவும், அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டார்.
இந்த சின்னமானது உலகில் அன்பின் சின்னம் மட்டுமே எனவும் அது உண்மையான இதயப் பிரதியல்ல எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
ஆகவே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ‘இதயம்’ சின்னத்தில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள போதிலும், அந்த சின்னத்தில் கட்சிகளோ அல்லது சுயேட்சைக் குழுக்களோ பதிவுசெய்யப்படவில்லை என்பதுடன் அவ்வாறான சின்னத்தில் கட்சியையோ அல்லது சுயேட்சைக்குழுவையோ பதிவுசெய்ய முடியாது என்பதையும் factseeker உறுதிப்படுத்துகின்றது.