அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பகிரப்படும் போலிச் செய்தி

அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு இல்லை எனவும், அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக மற்றும் ஜனாதிபதி அநுரவின் அரசாங்கம் தெரிவித்துள்ளதாக பகிரப்படும் செய்திகளில் உண்மையில்லை.
by Anonymous |
ஏப்ரல் 2, 2025

அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு இல்லை எனவும், அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக மற்றும் ஜனாதிபதி அநுரவின் அரசாங்கம் தெரிவித்துள்ளதாக பதிவுகள் சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது. இந்த பதிவுகள் சமூகம் மற்றும் டெய்லி சிலோன் இணையதளங்களில் பகிரப்பட்டிருப்பதையும் காணக்கிடைத்தது.
எனினும் இந்த செய்தித்தலைப்புகளுக்கு முற்றிலும் மாறுபட்ட விதத்திலான செய்திகள் ஏனைய பிரதான செய்தித்தாள்களில் வெளியாகியுள்ள காரணத்தினால் இந்த செய்தியின் உண்மைத்தன்மை குறித்து factseeker ஆராயத் தீர்மானித்தது.
கடந்த மார்ச் மாதம் 29ஆம் திகதி அமைச்சர் பிமல் ரத்நாயக வவுனியாவில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இது குறித்து 30 ஆம் திகதி வெளியாகியுள்ள வீரகேசரி மற்றும் ஈழநாடு ஆகிய பத்திரிகைகளில் முன்பக்க செய்தியாக பிரசுரிக்கப்பட்டுள்ளன.
அந்த செய்திகளில், வீரகேசரி பத்திரிகையில் ” அரசியல் கைதிகளை விடுவிக்க படிப்படியாக நடவடிக்கை” என்ற தலைப்பிலும், ஈழநாடு பத்திரிகையில் பிரதான செய்தியில் ” அரசியல் கைதிகளை விடுவிப்போம், ஆனால் அவர்களை உடனடியாக விடுவிக்க முடியாது. நாங்கள் ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்கள் தான் ஆகின்றது. ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் இருந்தாலும் படிப்படியாக அதற்கான செயன்முறைகள் ஊடாகத்தான் முன்னெடுக்க முடியும்” என அறிக்கையிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், சக்தி தொலைக்காட்சியில் கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி வெளியாகிய செய்தியில் அமைச்சர் பிமல் ரத்நாயக கூறிய விடயங்களை அவதானிக்க முடிந்தது. அதில் அமைச்சர் பிமல் ரத்நாயக “நாங்கள் ஆட்சி அமைத்து தற்போது நான்கரை மாதங்களே ஆகின்றன. எவ்வாறாயினும் நாம் நிச்சயமாக சிறை கதைகளுக்கு நீதியை பெற்று தருவோம்” என தெரிவித்திருந்தார்.
https://youtu.be/_5lc-zdhu4c?si=jomCDa0DC152yZ0i
ஆகவே, அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு இல்லை எனவும், அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக மற்றும் ஜனாதிபதி அநுரவின் அரசாங்கம் தெரிவித்துள்ளதாக சமூகம் மற்றும் டெய்லி சிலோன் இணையதளங்களில் பகிரப்படும் செய்திகளில் உண்மையில்லை என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.