அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனின் மனவேதனை என பகிரப்படும் காணொளி ஒரு பாடசாலை நாடகமாகும்

பேரனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட குழந்தை ஒருவர் தனது துயரத்தை விவரிப்பதாகக் கூறும் காணொளி தவறாக வழிநடத்துவதாக அமைந்துள்ளது.
by Anonymous |
டிசம்பர் 18, 2025

நாட்டில் ஏற்பட்ட டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவன், பாடசாலையொன்றில் காலைக் கூட்டத்தில் அழுது தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதை வெளிப்படுத்தும் ஒரு காணொளி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது. அந்தக் காணொளியில் இரண்டு ஆசிரியர்கள் குறித்த மாணவனின் அனுபவத்தை விவரிக்க கோருவதையும் கவனிக்க முடிந்தது.
இந்த காணொளி குறித்து கருத்து தெரிவித்த சமூக ஊடக பயனர்கள், ஆசிரியர்கள் மிகவும் தவறு செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளதுடன், இது மிகவும் தவறான செயல் என்று விமர்சித்துள்ளனர். மற்ற குழந்தைகள் முன்னிலையில் இதுபோன்ற சூழ்நிலையில் ஒரு குழந்தையை அவமானப்படுத்துவது தகுதியற்ற செயல் என்ற விமர்சனங்களும் எழுந்திருந்தன.
இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பாடசாலையின் சார்பிலான விளக்கமொன்றை வழங்கவேண்டும் என பாசாலை நிருவாகம் FactSeekr இடம் கேட்டுக்கொண்டதற்கு அமைய பாடசாலையின் அடையாளத்தை வெளியிடாமல் இந்த சம்பவம் குறித்த உண்மைகளை factseeker பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த தீர்மானித்தது.

இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படும் பாடசாலை அண்மையில் ஏற்பட்ட பேரனர்த்தத்தில் பாதிக்கப்படாத பாடசாலையாகும். மேலும் இதுபோன்ற செயல் உண்மையில் நடந்ததா என்று factseeker விசாரித்தபோது, காலை கூட்டத்தின் போது அரங்கேற்றப்பட்ட நாடகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு காணொளி இதுவென பாடசாலை அதிபர் உறுதிப்படுத்தினார்.
16.12.2025 அன்று காலை கூட்டத்தின் போது, பாடசாலையின் நாடகக் குழு, மாணவர்களுக்கான நாடக பயிற்ச்சி ஆலோசனை ஆசிரியர் மற்றும் மற்றொரு ஆசிரியர் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர் எனவும், மேலும் பாடசாலையின் நாடகக் குழுவின் ஒரு மாணவர் இதற்குப் பயன்படுத்தப்பட்டார் எனவும் அதிபர் தெரிவித்ததுடன், சம்பந்தப்பட்ட மாணவன் பேரிடரில் பாதிக்கப்படாத மாணவன் என்றும் அதிபர் தெரிவித்தார்.
பேரிடர் சூழ்நிலையை எதிர்கொண்ட மாணவர்கள் யாராவது இந்த பாடசாலையில் இருக்கிறார்களா? என factseeker வினவியபோது, தனது பாடசாலையில் எந்த மாணவரும் இந்த பேரிடரை எதிர்கொள்ளவில்லை எனவும், பேரிடரை எதிர்கொண்ட குழந்தைகளின் நிலைமை மற்றும் பேரிடர் சூழ்நிலை குறித்து குழந்தைகளிடையே அனுதாபத்தை ஏற்படுத்துவதற்காக மட்டுமே இது செய்யப்பட்டது என்றும் அவர் கூறினார்.
அந்தக் காலை கூட்டத்தை நடத்தும்போது பின்பற்றப்பட்ட நிகழ்ச்சி நிரலையும் உறுதிப்படுத்திக்கொள்ள முடிந்தது.

ஆகவே, பேரிடரை எதிர்கொண்ட ஒரு மாணவர் காலை கூட்டத்தில் ஆசிரியர்களால் சங்கடப்பட்டு அந்த சூழ்நிலையை விளக்குவது போன்ற வீடியோவானது, காலை கூட்டத்தின் போது அரங்கேற்றப்பட்ட நாடகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு காணொளி என்பதுடன் , சமூக வலைதளங்களில் இது தவறுதலான கண்ணோட்டத்தில் பலரால் பகிரப்படுகின்றது என்பதை FactSeeker உறுதிப்படுத்துகின்றது.