அஜித் மான்னப்பெரும எம்.பி குறித்து தவறாக பகிரப்படும் செய்தி
சுற்றுசூழல் தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவராக "COP 28 -UN Climate Change Conference " மாநாட்டில், கலந்து கொண்டதாக அஜித் மான்னப்பெரும எம்.பி தெரிவித்தார்
by Anonymous |
ஜூன் 13, 2024
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் வெளிநாட்டு பயணமொன்றில் இணைந்து கொண்டதாக தெரிவிக்கும் சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு, பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி தாவல்கள் தொடர்பில் அரசியல் மேடைகளில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், ஜனாதிபதியுடன் வெளிநாட்டு பயணங்கள் மற்றும் பிற பண்டிகை நிகழ்வுகளில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் இவ்வாறான செய்திகள் பகிரப்பட்டும் வருகின்றன.
இந்நிலையில், ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணமொன்றில் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும கலந்து கொண்டதாகவும், “ரணிலுடன் வெளிநாட்டு சுற்றுப்பயணம் செல்லும் அஜித் மான்னப்பெரும. பகலில் சஜித்துடன், இரவில் ரணிலுடன்” எனும் தலைப்பில் புகைப்படத்துடன் கூடிய பதிவுகளை சமூக வலைதளங்களில் பரவலாக அவதானிக்க முடிகின்றது.
அதேபோல் நேற்று (12.06.2024) ஜே.வி.பியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதும், கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
factseeker இது குறித்து ஆராய்ந்து பார்த்தபோது, காலநிலை மாற்றம் தொடர்பாக கடந்த ஆண்டும் டிசெம்பர் மாதம் டுபாயில் நடைபெற்ற “COP 28 -UN Climate Change Conference” மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெருமவும் கலந்துகொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களே தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன என்பதை கண்டறிய முடிந்தது. இது குறித்து அஜித் மான்னப்பெரும எம்.பியிடம் வினவியபோது, சுற்றுசூழல் தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவராக “COP 28 -UN Climate Change Conference ” மாநாட்டில், நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தான் கலந்து கொண்டதாக அஜித் மான்னப்பெரும எம்.பி factseeker இடம் தெரிவித்தார்.
அதேபோல், 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் டுபாயில் நடைபெற்ற COP 28 மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பிக்க ரணவக்க, மதுர விதானகே, எம்.ராமேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன, ஜனாதிபதியின் சுற்றாடல் துறைசார் ஆலோசகர் கலாநிதி ஆனந்த மல்லவதந்திரி, நிதியமைச்சின் ஆலோசகர் தேஷால் டி மெல், ஜனாதிபதியின் சர்வதேச விவகாரப் பணிப்பாளர் டினூக் கொழும்புகே மற்றும் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரும் இந்த விஜயத்தில் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.