ஆட்சி அனுபவம் குறித்து ஹரிணி அமரசூரிய கூறியதாக பகிரப்படும் போலிச்செய்தி
"நிச்சயமாக நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியதில் எமக்கு அனுபவம் இல்லை. ஆனால் நாட்டைக் கட்டியெழுப்புவதில் இருந்து அனுபவத்தைப் பெறுகிறோம்."- ஹரிணி
by Anonymous |
செப்டம்பர் 30, 2024
“நாட்டை கட்டியெழுப்புவதில் எமக்கு அனுபவம் இல்லை” என ஹரிணி அமரசூரிய வெளிநாட்டு ஊடகவியலாளரிடம் தெரிவித்தார் என்ற பதிவுகள் சில சமூக ஊடகங்களில் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
நாட்டின் மூன்றாவது பெண் பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்றத்தை அடுத்து இவ்வாறான பதிவுகள் பகிரப்படுவதால் factseeker இது குறித்து ஆராய்ந்தது.
சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்ட அப் பதிவில் “நாட்டை கட்டியெழுப்புவதில் எமக்கு அனுபவம் இல்லை, அனுபவத்தில் இருந்து கற்றுக் கொண்டுள்ளோம் என ஹரினி அமரசூரிய தெரிவித்தார். (விசித்திரத்தை கண்டு சிரிக்கும் வெளிநாட்டு ஊடக மேடை)” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பிரதான ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனவா என ஆராய்ந்ததில் அவ்வாறான செய்திகள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது. மேலும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றதையடுத்து, கலாநிதி ஹரிணி அமரசூரிய தேர்தல் ஆணைக்குழுவிற்கு வருகை தந்த போது, BBC ஊடகத்திற்கு அவர் ஆங்கிலத்தில் கருத்து தெரிவித்த காணொளியை Factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
https://www.facebook.com/share/v/dSj6Je8Uv4rm1orK/?mibextid=D5
அக்காணொளியில், அடுத்த அரசாங்கத்தின் அனுபவம் பற்றி விமர்சனம் எழுந்துள்ளது. இதை பற்றி உங்கள் கருத்து என்னவென்று ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு “நிச்சயமாக நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியதில் எமக்கு அனுபவம் இல்லை. ஆனால் நாட்டைக் கட்டியெழுப்புவதில் இருந்து அனுபவத்தைப் பெறுகிறோம்.” என ஹரிணி அமரசூரிய பதிலளித்தார்.
இது குறித்து ஹரிணி அமரசூரியவிடம் factseeker வினவிய போது, சமூக ஊடகங்களில் பகிரப்படும் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளது போன்ற எந்தவொரு கருத்தையும் தான் கூறவில்லை எனவும் நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய அனுபவம் தனக்கு இல்லை என்றே தான் கூறியதாகவும் தெரிவித்தார்.
ஆகவே, “நாட்டை கட்டியெழுப்புவதில் எமக்கு அனுபவம் இல்லை” என ஹரிணி அமரசூரிய வெளிநாட்டு ஊடகவியலாளரிடம் தெரிவித்தார் என சமூக ஊடகங்களில் பகிரப்படும் பதிவுகள் தவறானவை என்பதை factseeker உறுதிப்படுத்துகிறது.