காலஞ்சென்ற இல்யாஸின் பெயர் வாக்குச்சீட்டில் இருந்து நீக்கப்பட்டதா?

இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆங்கில ஊடக அறிக்கையில் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.
by Anonymous |
செப்டம்பர் 19, 2024

ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய காலஞ்சென்ற ஐதுரூஸ் முஹம்மது இல்யாஸின் பெயர் நீக்கப்பட்டுள்ளதென இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளதாக News first tamil இணையதளம் வெளியிட்டுள்ள செய்தி தொடர்பில் factseeker கவனம் செலுத்தியது.
17.09.2024 அன்று News first tamil செய்தி தளத்தில் வெளியாகிய செய்தியில் “வாக்கெடுப்பு தொடர்பான ஆவணங்களிலிருந்தும் வாக்குச் சீட்டிலிருந்தும் ஐதுரூஸ் முஹம்மது இல்யாஸின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், கடந்த 17 ஆம் திகதி இது தொடர்பில் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மூன்று மொழிகளிலும் வெளியிடப்பட்ட ஊடக அறிவித்தல்களை factseeker அவதானித்தது.
அவற்றில் தமிழ் மற்றும் சிங்கள மொழி ஊடக அறிவித்தல்களில் “வாக்குச் சீட்டு மற்றும் வாக்கெடுப்புக்குரிய ஏனைய அனைத்து ஆவணங்களிலும் இறப்பெய்திய வேட்பாளரின் பெயர் நீக்கப்பட்டுள்ளதென்பதாகக் கருதப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள ஊடக அறிவித்தலில் “இறந்த வேட்பாளரின் பெயர் வாக்குச்சீட்டு மற்றும் அனைத்து தேர்தல் ஆவணங்களில் இருந்து நீக்கப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே, ஆங்கிலப் பிரதியை அடிப்படையாகக் கொண்டே News first tamil செய்தி தளத்தில் இந்த செய்தி வெளியாகியுள்ளதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
இது குறித்து இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்னாயக்கவிடம் factseeker வினவிய போது, ஆங்கில ஊடக அறிக்கையில் தவறாக குறிப்பிட்டுள்ளது என்றும் அதை திருத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
ஆகவே, தேர்தல்கள் ஆணைக்குழு தவறாக வெளியிட்ட ஆங்கில செய்தி அறிக்கையையே சில ஊடகங்களும் தவறாக பயன்படுதியுள்ளன என்பதை factseeker உறுதிப்படுத்துகிறது.
காலஞ்சென்ற ஐதுரூஸ் முஹம்மது இல்யாஸின் பெயர் வாக்குச்சீட்டில் இருந்து நீக்கப்படுமா அல்லது 39 வேட்பாளர்களினதும் பெயர்கள் வாக்குச்சீட்டில் உள்ளடக்கப்படுமா என்பது குறித்து முழுமையான கட்டுரையொன்றை factseeker ஏற்கனவே வெளியிட்டுள்ளது.
அந்த கட்டுரையின் link இங்கே கொடுக்கப்பட்டுள்ளது http://HTTPS://FACTSEEKER.LK/TAMIL/NEWS/%E0%AE%90%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BF/