இராமநாதன் அர்ச்சுனா MP குறித்து நகைச்சுவையாக பகிரப்படும் தவறான தகவல்

நகைச்சுவை நோக்கமாக இருந்தாலும் இது போன்ற சந்தர்ப்பங்களில் இவ்வாறான தவறான தகவல்கள் பகிர்வதை தவிர்க்குமாறு FactSeeker வலியுறுத்துகிறது.
by Anonymous |
பிப்ரவரி 19, 2025

கொழும்பு – புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஈடுப்பட்ட நபர் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா என நகைச்சுவை நோக்கத்துடன் சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
இச் சம்பவம் தொடர்பில் வெளியாகிய cctv காட்சியில் பதிவாகிய சந்தேக நபரின் முகமும் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் முகமும் ஒரே சாயலில் இருப்பதாக கூறியே இவ்வாறான புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. இவை நகைச்சுவை நோக்கத்துடன் பகிரப்பட்டாலும் பலர் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளதுடன், நகைச்சுவைக்கு அப்பாலும் இது தீவிரமாக பகிரப்படுவதால் பலரால் இது உண்மையென நம்பப்பட வாய்ப்புள்ளது. எனவே FactSeeker இது குறித்த தெளிவுபடுத்த விரும்பியது,
இன்று காலை துப்பாக்கி சூடு இடம்பெற்ற நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்ற விவாதங்களில் கலந்துகொண்டிருந்தார். மேலும் இத் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் குறித்த எந்தவொரு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. இது தொடர்பான விசாரணை இடம்பெற்று வருவதாகவும் பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் நகைச்சுவை நோக்கத்தில் இது போன்ற பதிவுகள் சமூக வலைதளங்களில் பகிரப்படுவதால் சமூகத்தில் பல தவறான எண்ணப்பாடுகள் ஏற்படுகின்றன. ஆகவே நகைச்சுவை நோக்கமாக இருந்தாலும் இது போன்ற சந்தர்ப்பங்களில் இவ்வாறான தவறான தகவல்கள் பகிர்வதை தவிர்க்குமாறு FactSeeker வலியுறுத்துகிறது.