கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீ பாளி வளாகம், வெகுசன ஊடக பீடமாக மாற்றப்பட்டதா?
கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீ பாளி வளாகம், "வெகுசன ஊடக பீடமாக"மாற்றப்பட்டது என்றும், மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம், "பொது சுகாதாரம் மற்றும் குடும்ப மருத்துவத் துறையாக" மாற்றப்பட்டது என்றும் பகிரப்படுகின்ற செய்திகள் உண்மைக்கு புறம்பானது.
by Anonymous |
டிசம்பர் 9, 2024
கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீ பாளி வளாகம், “வெகுசன ஊடக பீடமாக”மாற்றப்பட்டது என்றும், மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம், “பொது சுகாதாரம் மற்றும் குடும்ப மருத்துவத் துறையாக” மாற்றப்பட்டது என்றும் செய்திகள் சில பிரதான ஊடகங்களிலும் சமூகவலைதளங்களிலும் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
கல்வி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய இதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டதாக பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இது குறித்து சமூக வலைதளங்களில் பல கருத்துக்கள் பகிரப்பட்டுவருவதால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.
பிரதான ஊடகங்களில் தெரிவித்தது போன்று இது குறித்த வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளதா என ஆராய்ந்ததில், இவ்வாண்டு நவம்பர் 29 ஆம் திகதியன்று பிரதமர் ஹரிணி அமரசூரிய, இலக்கம் 2412/35 மற்றும் இலக்கம் 2412/36 ஆகிய அதி விசேட வர்த்தமானிகளை வெளியிட்டுள்ளார் என்பதை அறிய முடிந்தது.
இலக்கம் 2412/35 அதி விசேட வர்த்தமானியில், 1978ஆம் ஆண்டு 16ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் 22 மற்றும் 27(1)(ஆ) பிரிவுகளின் கீழ், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், 1996 ஜூன் 20ஆம் திகதி வெளியிடப்பட்ட 928/16 சிறப்பு வர்த்தமானியின் அட்டவணை திருத்தப்பட்டுள்ளது. இதன் கீழ், அட்டவணையின் I மற்றும் II நிரல்களை நீக்கி, அதற்குப் பதிலாக புதிய நிரல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
அதன் படி, கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீ பாளி வளாகம் வெகுசன ஊடக பீடமாக மாற்றப்படவில்லை என்பதையும் ஸ்ரீ பாளி வளாகத்தில் வெகுசன ஊடக பீடம் நிறுவப்பட்டு அதன் கீழ் நான்கு முக்கிய துறைகள் சேர்க்கப்பட்டுள்ளது என்பதையும் உறுதிப்படுத்த முடிந்தது.
மேலும், இது தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழக ஸ்ரீபாளி வளாகத்தின் தலைவர் கலாநிதி பிரதிபா மஹாநாமஹேவாவிடம் FactSeeker வினவியபோது, இது குறித்த விளக்க குறிப்பொன்றை FactSeeker க்கு அனுப்பினார். அதில் “கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீ பாளி வளாகத்துக்கு வெகுசன ஊடக பீடம் சேர்த்து புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மொரட்டுவ பல்கலைக்கழகம் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி குறித்து FactSeeker ஆராய்ந்ததில், 2006 நவம்பர் 03ஆம் திகதி வெளியிடப்பட்ட 1469/38 இலக்க சிறப்பு வர்த்தமானியால், மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பீடங்கள் மற்றும் கல்வி துறைகள் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. 2020 பிப்ரவரி 19ஆம் திகதி வெளியிடப்பட்ட 2163/22 இலக்க சிறப்பு வர்த்தமானியின் அடிப்படையில், மொரட்டுவ பல்கலைக்கழக மருத்துவ பீடத்தையும் அதற்கேற்ப கல்வித் துறைகளையும் நிறுவுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
2412/36 இலக்க சிறப்பு வர்த்தமானி மூலம், அதில் வெளியிடப்பட்ட ஆணையின் இணைப்புப் பட்டியலில், முதல் நிரலின் கீழ் காணப்படும் “மருத்துவ பீடம்” என்ற பொருளுக்கு ஏற்ப, இரண்டாவது நிரலின் கீழ் காணப்படும் “6. சமுதாய மருத்துவம் மற்றும் குடும்ப மருத்துவ கல்வி துறை” என்பதற்குப் பதிலாக, “6. பொது சுகாதாரம் மற்றும் குடும்ப மருத்துவ திணைக்களம்” என மாற்றம் செய்யப்பட்டு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இவ் வர்த்தமானியில் மருத்துவ பீடத்தை ஒழிப்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
மேலும், இது தொடர்பில் மொரட்டுவ பல்கலைக்கழக மருத்துவ பீடத்திடம் FactSeeker வினவிய போது, மருத்துவ பீடத்தின் கீழ் உள்ள துறை ஒன்றின் பெயர் மாத்திரமே மாற்றப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தினர்.
ஆகவே, கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீ பாளி வளாகம், “வெகுசன ஊடக பீடமாக”மாற்றப்பட்டது என்றும், மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம், “பொது சுகாதாரம் மற்றும் குடும்ப மருத்துவத் துறையாக” மாற்றப்பட்டது என்றும் பகிரப்படுகின்ற செய்திகள் உண்மைக்கு புறம்பானது என்பதை FactSeeker உறுதிபடுத்துகிறது.