மாகாணசபை முறைமை தொடர்பில் ரில்வினின் கருத்தும் -சர்ச்சைகளும்
மாகாண சபை முறைமையை நீக்குவது தொடர்பில் இந்தத் தருணம் வரை எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை என அரசாங்கம் தெரிவிக்கின்றது.
by Anonymous |
டிசம்பர் 5, 2024
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள மாகாணசபை முறைமை நீக்கப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளதாக சமூக வலைதளங்களிலும், இணையதள செய்தி சேவைகளிலும் அதிகளவில் செய்திகள் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது. இது குறித்து கவனம் செலுத்தியதில், “இலங்கையில் நடைமுறையில் உள்ள அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள மாகாணசபை முறைமையை முடிவுக்குக் கொண்டுவரவும், புதிய அரசியலமைப்பின் ஊடாக அனைத்து இன மக்களுக்கும் சமமான உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்யவும் தேசிய மக்கள் சக்தி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்” என்றே அச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் தாம் அவ்வாறு கூறவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவும் , அரசாங்கத்தின் நிலைப்பாடு அதுவல்ல என அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலரும் தெரிவித்துள்ள செய்திகளையும் பிரதான பத்திரிகைகளில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
ஆகவே, இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்ததில், கடந்த 01.12. 2024 அன்று வீரகேசரி வாராந்த பத்திரிகைக்கு மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் கூறிய விடயங்களை அடிப்படையாக வைத்தே இந்த செய்திகள் வெளியாகியுள்ளன என்பதை அவதானிக்க முடிந்தது,
கடந்த 01.12. 2024 அன்று வீரகேசரி வாராந்த பத்திரிகையின் பிரதான தலைப்புச் செய்தியில், “புதிய அரசியல் அமைப்பில் 13 ஆவது திருத்தம் இரத்து செய்யப்படும்” என்ற தலைப்பின் கீழ், ‘இலங்கையில் நடைமுறையில் உள்ள அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள மாகாணசபை முறைமையை முடிவுக்குக் கொண்டுவரவும், புதிய அரசியலமைப்பின் ஊடாக அனைத்து இன மக்களுக்கும் சமமான உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்யவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்’ என்ற செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தி பல்வேறு இணையதளங்களில் அவ்வாறே பிரசுரிக்கப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிந்தது, அதனை அடிப்படையாகக் கொண்டு சமூக வலைதளங்களில் செய்திகள் மற்றும் கருத்துக்கள் பகிரப்படுகின்றன.
அத்துடன், வீரகேசரியின் செய்தியை அடிப்படையாக வைத்து பல்வேறு அரசியல்வாதிகளும், சமூக வலைதள செயற்பாட்டாளர்களும் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்,
எனினும் வீரகேசரி வாராந்த பத்திரிகைக்கு அவர் வழங்கியுள்ள நேர்காணலில், அரசியல் அமைப்பில் புதிய தீர்வுத்திட்டங்கள் முன்வைக்கப்படும் வரையில் மாகாணசபை முறைமையை நீக்க மாட்டோம் என்பதை அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் பதிவு செய்துள்ளார் என்பதை அவதானிக்க முடிந்தது.
ஆகவே, அவர் வழங்கிய நேர்காணலுக்கும் வீரகேசரி பிரசுரித்துள்ள முன்பக்க செய்திக்கும் இடையிலான கருத்து மயக்கநிலை காரணமாகவே இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் 03.12.2024 அன்று வீரகேசரி தினசரி பத்திரிகையின் முன்பக்கத்தில் மீண்டும் ஒரு செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது, அதில், ’13ஆம் திருத்தம் குறித்து ஜே.வி.பியின் விளக்கம்’ என்ற தலைப்பில் செய்தியொன்று பிரசுரமாகியுள்ளது. அந்தச் செய்தியில், 2024 டிசம்பர் 01 ஆம் திகதி வீரகேசரி பத்திரிகையில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் வழங்கிய நேர்காணலை சார்ந்ததாக பிரசுரித்துள்ள பிரதான செய்தி மற்றும் அதற்காக இடப்பட்டுள்ள தலைப்பு ஊடாக வாசகர் மத்தியில் தவறான கருத்து தோன்றுவதால் அதனை சரி செய்ய வேண்டியுள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன் விளக்கம் ஒன்றையும் வழங்கியுள்ளனர். அதிலும் “வடக்கு மக்களின் சிக்கல்களைத் தீர்த்துவைக்க 1987இல் கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தம் தவறியுள்ளது. அதனால் வடக்கு மக்களின் சிக்கல்களைத் தீர்த்துவைக்க மிகவும் நடைமுறைச்சாத்தியமானதும் சரியானதுமான தீர்வினை முன்வைக்க வேண்டியுள்ளது எனவும், அத்தகைய மிகச்சிறந்த தீர்வினை முன்வைத்து நடைமுறைப்படுத்தும் வரை 13ஆவது திருத்தத்தையும் மாகாண சபைகளையும் ஒழிக்கப்போவதில்லை என்பதே எமது நிலைப்பாடாகும். மேற்படி புதிய தீர்வுகள் எதிர்காலத்தில் கலந்துரையாடலுக்கு இலக்காக்கப்படுகின்ற அரசியலமைப்பில் உள்ளடக்கப்படும். அந்த தீர்வு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களினதும் கருத்துக்கள் மற்றும் முன்மெழிவுகளை அடிப்படையாகக்கொண்டே தயாரிக்கப்படும் என்றே தெரிவித்ததாகவும் தெளிவு படுத்தப்பட்டுள்ளது” என செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.
மேலும், நேற்று முன்தினம் 02.12.2024 அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ, “மாகாண சபை முறையை நீக்குவது தொடர்பில் இந்தத் தருணம் வரை அரசாங்கம் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை. புதிய அரசியலமைப்பை கொண்டுவர மூன்று வருடங்கள் வரை செல்லும். அதனால் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிமன்ற முறை தொடர்பில் தமது சிபாரிகளை அனைவரும் முன்வைக்க முடியும். புதிய அரசியலமைப்பு மக்களுடனான கலந்துரையாடலின் பின்னரே கொண்டுவரப்படும். இது தொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்த போதிய கால அவகாசம் உள்ளது. மாகாண சபை முறையை ஒழிப்பதற்கு அரசாங்கம் எந்தவொரு தீர்மானத்தை இதுவரை எடுக்கவில்லை. புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் தருணத்தில் இது தொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்தலாம். மாகாண சபை முறை புதிய அரசியலமைப்பில் தொடர்ந்தால் தற்போது இருக்கும் அதிகாரங்களுக்கு மேலதிகமான அதிகாரங்கள் வழங்கப்படாது என்பதுடன் குறைக்கவும் படாது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே வீரகேசரி பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட செய்தியின் கருத்து மயக்க நிலைமை காரணமாகவே சமூக வலைதளங்களில் தவறாக செய்திகள் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன், ரில்வின் சில்வா மற்றும் அரசாங்கம் அது குறித்து சரியான விளக்கத்தை கொடுத்துள்ளதனர் என்பதை factseeker தெரிவிக்கின்றது.