‘கும்பகர்ணனின் வாள்’ என பகிரப்படும் AI புகைப்படங்கள்
சமூக வலைதளங்களில் பகிரப்படும் காணொளியில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புகைப்படங்களாகும்.
by Anonymous |
அக்டோபர் 14, 2024
இந்து புராணமான இராமாயணத்தில் இடம்பெறும் ஒரு கதாப்பாத்திரமான கும்பகர்ணனின் வாள் கிடைக்கபெற்றுள்ளதாக கூறப்படும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
“கும்ப கர்ணனின் வாள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது, ராமாயணம் நடந்தது என்பதற்கு இதை விட ஒரு ஆதாரம் தேவை இல்லை..ஜெய் ஸ்ரீ ராம்” என்ற பதிவுடனேயே அக் காணொளி பகிரப்படுகின்றது. மேலும் அந்த காணொளியில் மிகப்பெரிய வாள்களின் புகைப்படங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த காணொளியில் பகிரப்படுகின்ற புகைப்படங்களை Google lens மூலம் ஆராய்ந்து பார்த்ததில் இந்தப் புகைப்படம் பல்வேறு பதிவுகளில் காணப்படுவதுடன், இவ்வாறான பல்வேறு பதிவுகளை டிக்டோக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், பேஸ்புக் மற்றும் யூடியூப் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடக தளங்களில் factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
அவற்றில் ஒன்று- துருக்கியில் 3,000 ஆண்டுகள் பழமையான ராட்சத வாள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறும் புகைப்படமாகும்.
இன்னொரு பதிவில் – தல்வார் அல்லது துல்வார் என்றும் உச்சரிக்கப்படுகின்ற, இந்திய துணைக் கண்டத்தில் இருந்த வளைந்த வாள் என பதிவிடப்பட்டுள்ளது.
இக் காணொளியில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படங்களை உன்னிப்பாக அவதானித்ததில் அப் புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதை அடையாளங்காண முடிந்தது.
உதாரணமாக : புகைப்படங்களில் உள்ள நபர்கள் குறிப்பிடத்தக்க வகையில் சிதைந்த கைகள், விகிதாசாரமற்ற உடல்கள் மற்றும் இயற்கைக்கு மாறான முக அம்சங்களைக் கொண்டுள்ளனர். கூடுதலாக, படங்களில் உள்ள நிழல்கள் சீரற்றவையாகவும், சில முரண்பட்ட திசைகளில் அவர்களின் பார்வைகள் இருப்பதையும் அவதானிக்க முடிந்தது.
மேலும், இப் புகைப்படங்களை Is It Ai image Detector மற்றும் Hive Moderation.com ஆகிய தளங்கள் மூலம் ஆராய்ந்ததில் இப் புகைப்படங்கள் 70% க்கு மேல் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளவை என குறிப்பிடுகின்றன.
ஆகவே, இராமாயணத்தின் கதாப்பாத்திரமான கும்பகர்ணனின் வாள் கிடைக்கபெற்றுள்ளதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் காணொளியில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.