UNHCR இலங்கை அலுவலகத்தின் அறிக்கையென போலியான அறிக்கையும், தரவுகளும் பகிரப்படுகின்றன

எனினும் இந்த அறிக்கையின் உண்மைத்தன்மை குறித்து factseeker ஆராய்ந்து பார்த்ததில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை அலுவலகத்தினால் அவ்வாறான கணக்கெடுப்பு எதுவும் முன்னெடுக்கப்படவில்லை
by Anonymous |
மே 15, 2024

இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தல் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை அலுவலகம் நடத்திய தனித்துவமான கணக்கெடுப்பின் அறிக்கை அவர்களின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்படுவதற்கு முன்பே வெளியிடப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டின் உயர்மட்ட புலனாய்வு அதிகாரி ஒருவரினால் இந்த அறிக்கை கசிந்துள்ளதாகவும் ‘அரகல நியூஸ்’ எனும் இணையதளம் செய்தியொன்றை பிரசுரித்துள்ளது.
இந்தச்செய்தியுடன் அறிக்கை ஒன்றும் இணைக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருவதுடன், அது குறித்து பல்வேறு கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
மேலும், இந்த அறிக்கை 330 பல்கலைக்கழக மாணவர்களால் 20 நாட்களாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பு எனக் கூறப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு மாவட்டத்தையும், ஒவ்வொரு தேர்தல் தொகுதியையும் பிரதிநிதித்துவப்படுத்தியும், ஒவ்வொரு இனத்தவர் மற்றும் ஒவ்வொரு தொழில்முறை நபர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தியும் மக்களின் கருத்துக்கள் பெறப்பட்டதாக அவர்கள் இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இருபத்தி எட்டு பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில் உள்ளகடக்கப்பட்டுள்ள விடயங்களாவன,
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அதிக வாக்குகளைப் பெறுவார் எனவும், அக்கட்சி 36.31% வாக்குகளை பெற்றுக்கொள்ளும் எனவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இரண்டாவது அதிக வாக்குகள் கிடைக்கும் எனவும், அது 34.53 சதவீதமாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி 16.35% வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தை பிடிக்கும் எனவும், தேசிய மக்கள் சக்தி 10.59% வாக்குகளுடன் நான்காவது இடத்தில் இருக்கும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் இந்த அறிக்கையின் உண்மைத்தன்மை குறித்து factseeker ஆராய்ந்து பார்த்ததில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை அலுவலகத்தினால் அவ்வாறான கணக்கெடுப்பு எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது. அவர்களது உத்தியோகபூர்வ இணையதளத்திலோ அல்லது, சமூக வலைதள பக்கங்களிலோ அவர்கள் இது குறித்து எந்தவொரு அறிக்கையையும் வெளியிடவில்லை.
மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை அலுவலகத்துடன் தொடர்புகொண்டு வினவியபோது அவர்கள் இவ்வாறான அறிக்கையொன்று தமது அலுவலகத்தினால் தயாரிக்கவோ அல்லது ஆய்வுகளுக்காக எவரையும் பயன்படுத்தவோ இல்லை என்பதையும் உறுதிப்படுத்தினர்.
அதேபோல் இன்றைய தினம் (14.05.2024) அவர்களின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலும் அது குறித்த அறிவிப்பொன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை அலுவலகம் விடுத்துள்ளது. அதிலும் இந்த தகவல் போலியானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
தேர்தல் நெருக்குகின்ற தற்போதைய காலகட்டத்தில் அரசியல் சார்ந்து பல்வேறு போலிச் செய்திகள் பகிரப்பட்டு வருவதை factseeker ஆதாரத்துடன் உறுதிப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் இந்த அறிக்கையும் போலியாக தயாரிக்கப்பட்ட அறிக்கை என்பதை ஆதரங்களுடன் factseeker உறுதிப்படுத்துகின்றது.