TNL அலைவரிசை மூடப்படுகின்றதா?

TNL அலைவரிசை சுப்ரீம் தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் ஆகஸ்ட் 1ஆம் திகதி முதல் சுப்ரீம் தொலைக்காட்சியுடன் இணைந்து செயற்படும்
by Anonymous |
ஜூலை 26, 2024

TNL அலைவரிசை ஆகஸ்ட் மாதம் 1ம் திகதியுடன் மூடப்படும் என்ற பதிவொன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதை factseekerஇனால் அவதானிக்க முடிந்தது.
’31 ஆண்டுகால சேவையை முடித்துக்கொண்டு ஆகஸ்ட் 1ஆம் திகதி TNL அலைவரிசை மூடப்படும்’ என்ற செய்தி “இரி” என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அச்செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றது.
இவ்வாறு பகிரப்படும் செய்தியின் உண்மைத்தன்மையை factseeker ஆராய்ந்து பார்த்ததில், அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 1ஆம் திகதியில் இருந்து தனது அலைவரிசை ‘சுப்ரீம் டிவி’ அலைவரிசையுடன் இணைந்து ஒரே நேரத்தில் ஒளிபரப்பப்படும் என, TNL அலைவரிசையின் நிறைவேற்றுக்குழு factseeker இடம் தெரிவித்தது. TNL அலைவரிசையின் அனைத்து ஊழியர்களும் எதிர்காலத்தில் ‘சுப்ரீம் டிவி’ நிருவாகத்துடன் இணைந்து பணியாற்றுவார்கள் என்பதையும் உறுதிப்படுத்தியது.
Supreme Media Networkஇன் பணிப்பாளர் காஞ்சன கொடிதுவுக்குவிடம் factseeker வினவியபோது, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் விறுவிறுப்பை பார்வையாளர்களிடம் மேன்மையாகக் கொண்டு செல்வதற்காக TNL அலைவரிசை சுப்ரீம் தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆகஸ்ட் 1ஆம் திகதி முதல் சுப்ரீம் தொலைக்காட்சியுடன் இணைந்து செயற்படும் எனவும் அவர் உறுதிப்படுத்தினார்.
இதற்காக, சுப்ரீம் குளோபல் பிரைவட் நிறுவனம் TNL நிர்வாகத்துடன் ஒரு மூலோபாய ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் TNLஇன் ஊடக நிபுணத்துவம் மற்றும் சுப்ரீம் மீடியா நெட்வேர்க்கின் சமீபத்திய தொழிநுட்பம் ஆகியவற்றைக் கொண்டு விரிவான தகவல்களை வழங்குவதாகவும் காஞ்சன கொடிதுவக்கு தெரிவித்தார்.
ஆகஸ்ட் 1ஆம் திகதி முதல் “சுப்ரீம் டி.என்.எல்” தொலைக்காட்சி அலைவரிசையாக அறியப்படும் என்றும், ஆரம்பம் முதல் மக்களைக் கவர்ந்த “ஜனஹத” உள்ளிட்ட தற்போதைய அரசியல் நிகழ்ச்சிகள் அதற்கேற்ப ஒளிபரப்பப்படும் என்றும் காஞ்சன கொடிதுவக்கு மேலும் தெரிவித்தார்.
இது குறித்து சுப்ரீம் குளோபல் பிரைவட் லிமிடெட் நிறுவனம் ஒரு ஊடக அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.