TikTok-ன் உரிமையாளர் என பகிரப்படும் போலிச்செய்தி

TikTok-ன் உரிமையாளர் எனக் கூறி, சமூகவலைதளங்களில் பகிரப்படும் காணொளியில் உள்ள நபர் சீனாவை சேர்ந்த சொற்பொழிவாளரான "Chen Zhou" என்பவராவார்.
by Anonymous |
பிப்ரவரி 26, 2025

உலகளவில் பிரபலமான சமூக ஊடக தளமான TikTok-ன் உரிமையாளர் எனக் கூறி, கால்களை இழந்த மாற்றுத்திறனாளி ஒருவரின் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
இக் காணொளியை பார்த்த பலரும் இந்த நபர் TikTok-ன் நிறுவனர் மற்றும் உரிமையாளர் என்று நம்புகிறார்கள். ஆனால், சிலர் அது தவறான தகவல் எனக் கூறுகின்றனர். இருப்பினும் இது தொடர்பில் சமூகவலைதளங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.
TikTok என்பது சீனாவின் ByteDance நிறுவனத்துக்குச் சொந்தமான காணொளி பகிர்வு சமூக ஊடக தளமாகும். இது 2016 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் நிறுவனர் Zhang Yiming என்பவர், இவர் சீனாவை சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர் ஆவார். ஆகவே, இக் காணொளியில் உள்ள நபர் TikTok இன் நிறுவுனர் அல்ல என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
மேலும், இக் காணொளியில் உள்ள நபர் குறித்து ஆராய்ந்ததில், இவர் பிரபல ஊக்கமளிப்பு சொற்பொழிவாளரான “Chen Zhou” என்பராவார். இவர் தனது வாழ்க்கையை தெருப் பாடகராக தொடங்கி பின்னர் பிரபலமானவர். தற்போது சொற்பொழிவாளராக உள்ளார்.
ஆகவே, TikTok-ன் உரிமையாளர் எனக் கூறி, சமூகவலைதளங்களில் பகிரப்படும் காணொளி உண்மைக்கு புறம்பானது என்பதையும் அக் காணொளியில் உள்ள நபர் சீனாவை சேர்ந்த சொற்பொழிவாளரான “Chen Zhou” ஆவார் என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகின்றது