TESLA நிறுவனம் தொலைபேசியை அறிமுகப்படுத்துகிறதா?

Tesla நிறுவனத்தின் இணையதளத்தில் இது குறித்த எந்தவொரு உத்தியோகப்பூர்வ அறிவிப்புக்களும் வெளியிடப்படவில்லை.
by Anonymous |
நவம்பர் 27, 2024

“எலன் மஸ்கின் “TESLA PI” Model தொலைபேசியானது டிசம்பர் 2024 இல் பண்டிகைக் கால பரிசாக வெளிவருகிறது.” என பதிவுகள் சில சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
அவ்வாறு பகிரப்பட்ட பதிவுகளில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தன,
எலன் மஸ்கின் TESLA PHONE PI முதலாவது மாடல் டிசம்பர் 2024ல் கிறிஸ்மஸ் கால பரிசாக அமெரிக்காவில் வெளிவருகிறது.
📱சூரிய சக்தியால் சார்ஜ் செய்யலாம்
பட்டரியை சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை, சூரிய சக்தியைப் பயன்படுத்துவதால், தானாகவே சார்ஜ் செய்ய ஒளி மட்டுமே தேவை (சூரிய ஒளியில் அதை வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை).
📱 தனியான இணையத் திறன் WIFI தேவையில்லை, ஏனெனில் நேரடியாக எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங் சட்டர்லைட் உடன் இணைகிறது, இது உலகளாவிய நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது.
📱இதற்கு பூமி – சந்திரன் – செவ்வாய் இணைப்பும் உள்ளது.
📱 விசேட அறிமுக விலையாக $300 அமெரிக்க டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
📱விரைவில் ஆப்பிளின் சந்தையை காலி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.
FactSeeker இதன் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்ததில், Tesla நிறுவனத்தின் இணையதளத்தில் இது குறித்த எந்தவொரு உத்தியோகப்பூர்வ அறிவிப்புக்களும் வெளியிடப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
மேலும், இது தொடர்பில் ஆராய்ந்த போது YouTube போன்ற சமூகவலைதளங்களில் இது குறித்த பல காணொளிகளை காணக்கூடியதாக இருந்தது. அக் காணொளிகளில் TESLA PI தொலைபேசி குறித்து விளக்கங்கள் அளிக்கப்பட்டிருந்தாலும் அவை நம்பக்கூடிய ஆதாரங்களுடன் விளக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
இது குறித்து மேலும் ஆராய்ந்ததில், 2020 ஆம் ஆண்டு எலன் மஸ்க் தனது x தளத்தில் பதிவிட்ட பதிவொன்றை அவதானிக்க முடிந்தது. அப் பதிவில் “ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் தொலைபேசிகள் என்பன நேற்றைய தொழில்நுட்பம்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இவ்வதந்திகள் குறித்து சர்வதேச தொழிநுட்ப ஆலோசனை தளமான ‘Tech advisor’ வெளியிட்ட விளக்க கட்டுரை ஒன்றையும் அவதானிக்க முடிந்தது. அக் கட்டுரையில் இவ்வாறான செய்திகள் போலியானவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆகவே, “எலன் மஸ்கின் “TESLA PI” Model தொலைபேசியானது டிசம்பர் 2024 இல் பண்டிகைக் கால பரிசாக வெளிவருகிறது.” என சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்ற பதிவுகள் போலியானவை என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.