NPPயின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிதாக 33,000 ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்புகள் என குறிப்பிடப்பட்டுள்ளதா?

அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் 20,000 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் நிரப்பப்படும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
by Anonymous |
ஆகஸ்ட் 27, 2024

வேலையற்ற பட்டதாரிகளுக்கு தமது அரசாங்கத்தின் கீழ் வேலை வழங்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்க அண்மையில் தெரிவித்திருந்தார்.
இது குறித்து factseeker அவதானம் செலுத்தியதில், இம்மாதம் (ஆகஸ்ட்) 8ஆம் திகதி அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வேலையற்ற பட்டதாரிகள் குழுவைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அநுரகுமார திஸாநாயக்க இதனை தெரிவித்திருந்தார் என்பதை அறிய முடிந்தது.
“எதிர்காலத்தில் வேலையில்லா பட்டதாரிகளை உருவாக்காத வகையில் பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் கல்வி சீர்திருத்தங்களை மேற்கொள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தயாராக உள்ளது. தற்போது 33,000 ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அத்துடன், உள்ளூர் வருமான வரித் திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என அநுரகுமார திஸாநாயக்க அங்கு தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க இது பற்றி ஊடகங்களுக்கு தெரிவித்த காணொளி அவரது யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.
https://www.youtube.com/watch?v=3DYglhurYXY
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்காக “வளமான நாடு, அழகான வாழ்வு” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் “பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு” என்ற பிரிவை தேசிய மக்கள் சக்தி ஒதுக்கியுள்ளது. அப் பிரிவில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
– ஆசிரியர் தொழிலில் 20,000 பட்டதாரிகள்
– 3000 அறிவியல், தொழில்நுட்பம், ஆங்கிலம், கணிதம் (STEM) பட்டதாரிகள் மற்றும் 9000 STEM அல்லாத பட்டதாரிகள் உட்பட 12,000 IT பட்டதாரிகள்.
– உள்நாட்டு வருவாய், சுங்கம், வெளிநாட்டு சேவைகள் மற்றும் சுற்றுலா ஆகியவற்றுக்கான 3000 வேலைகள்.
ஆகவே 33,000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் என அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருந்த போதிலும், அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் 20,000 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் நிரப்பப்படும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.