IMF குழுவினரை ஜனாதிபதி அநுர சந்திக்கவில்லையென தவறான செய்தி பகிரப்படுகின்றது.

IMF உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவை ஜனாதிபதி பிரத்தியேகமாக இரு தடவைகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
by Anonymous |
அக்டோபர் 4, 2024

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்ட பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பான கலந்துரையாடலில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்றிருக்காத நிலையில், IMF உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவை ஜனாதிபதி சந்திக்கவில்லை என்ற விமர்சன ரீதியான பதிவுகள் பல சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
அப் பதிவுகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருவதால் factseeker இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்தது.
சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகளுக்காக புதிய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள பொருளாதார குழுவிற்கும் இடையில் பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கடந்த ஒக்டோபர் 2ம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதை அறிய முடிந்தது.
இது குறித்த செய்தி ஜனாதிபதி ஊடக பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த பதிவொன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தியின் உத்தியோகபூர்வ முகநூல் கணக்கில் வெளியிட்டுள்ளமையும் காணக்கூடியதாக இருந்தது.
• ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்ட செய்தி:https://shorturl.at/M0ody
• சுனில் ஹந்துநெத்தியின் முகநூல் பதிவு :https://www.facebook.com/story.php?story_fbid=1079283286896061&id=100044431986343&rdid=IFsABZNKU8MEr6OG
இதன் மூலம் அக்கலந்துரையாடலில் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள பொருளாதார குழு உறுப்பினர்கள் மாத்திரமே பங்கேற்றுள்ளமையையும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்கவில்லை என்பதையும் உறுதிப்படுத்த முடிந்தது.
இருப்பினும்,சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீநிவாசன், சிரேஷ்ட தூதுவர் கலாநிதி பீட்டர் ப்ரூயர் உள்ளிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழுவினருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (3 ) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இது தொடர்பிலும் ஜனாதிபதி ஊடக பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
• ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்ட செய்தி: https://shorturl.at/4nTqH
அதேபோல், இன்றும் (4) இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் சிரேஷ்ட தூதுக்குழுவினருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஆகவே, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவினரை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சந்திக்கவில்லை என சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் பதிவுகள் தவறானவை என்பதை factseeker உறுதிப்படுத்துகிறது.