Daraz இன் பெயரில் பகிரப்படும் போலிக் காணொளிகள்

இலங்கையின் பிரபலங்கள் Daraz நிறுவனத்தை விளம்பரப்படுத்துவது போன்று பகிரப்படுகின்ற காணொளிகள் AI காணொளிகளாகும்.
by Anonymous |
மே 8, 2025

இலங்கையின் முன்னணி இணைய வணிக தளமான Daraz நிறுவனம், Samsung Galaxy S24 Ultra கையடக்க தொலைபேசிகளை மிகக் குறைந்த விலையில் வழங்குகிறது எனக் கூறும் காணொளிகள் சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர்கள் குமார் சங்கக்கார, லசித் மலிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ ஆகியோர் இந்த விளம்பரத்தில் பங்கேற்றது போன்ற காணொளிகளே இவ்வாறு பகிரப்படுகின்றன.

இது தொடர்பாக ஆராய்ந்ததில், கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார தனது உத்தியோகப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவொன்றை அவதானிக்க முடிந்தது. அதில், “தனக்கும் இந்த விளம்பரத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லையெனவும், அது செயற்கை நுண்ணறிவு (AI) தொழிநுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டதாகவும்” அவர் தெளிவுபடுத்தியிருந்தார்.

மேலும், அதே முகநூல் பக்கத்தில், லசித் மலிங்க மற்றும் கோட்டபய ராஜபக்ஷ ஆகியோரின் முகங்களைக் கொண்ட விளம்பரக் காணொளிகளும் பகிரப்பட்டிருந்தன.
இவ்விளம்பரக் காணொளிகள் “Promotion Daraz” என்ற முகநூல் கணக்கில் பகிரப்பட்டிருந்தன. எனினும், அந்தக் கணக்கு Daraz நிறுவனத்தின் உத்தியோகபூர்வ சமூக வலைதள கணக்கல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், Daraz நிறுவனத்தின் உண்மையான உத்தியோகபூர்வ பக்கங்களில் இது போன்ற காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளதா என ஆராய்ந்ததில் இவ்வாறான எந்தவொரு விளம்பரக் காணொளிகளும் வெளியிடப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

மேலும், இக் காணொளிகளை Google AI Image Checker இணையத்தளம் மூலம் ஆராய்ந்ததில், இந்த காணொளிகள் செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

அத்துடன், லசித் மலிங்கா தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்த காணொளி ஒன்றை செயற்கை நுண்ணறிவின் மூலம் மாற்றியே, தவறான விளம்பரக் காணொளியாக உருவாக்கி பகிரப்படுகிறது.

ஆகவே, இலங்கையின் பிரபலங்கள் Daraz நிறுவனத்தை விளம்பரப்படுத்துவது போன்று பகிரப்படுகின்ற காணொளிகள் செயற்க்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலியான காணொளிகள் என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.
 
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                            