“Daily Mirror” இணையதள பக்க வடிவமைப்புடன் பகிரப்படும் போலிச்செய்தி

Daily Mirror வலைத்தளத்தைப் போலவே ஒரு போலி வலைத்தளம் இருப்பதாகவும், இது ஒரு போலியான செய்தி என்றும் Daily Mirror இணையதள நிர்வாகி FactSeeker க்கு தெரிவித்தார்.
by Anonymous |
மார்ச் 14, 2025

“இலங்கையில் வசிப்பவர்கள் வரிகளிலிருந்து வருமானத்தைப் பெறத் தொடங்குவார்கள்” என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்ததாக “Daily Mirror” இணையதள பக்க வடிவமைப்புடனான செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
“விஜித ஹேரத்தின் உத்தரவின் பெயரில், இலங்கையில் வசிப்பவர்கள் வரிகளிலிருந்து வருமானத்தைப் பெறத் தொடங்குவார்கள்” என்ற தலைப்புடன் நேர்க்காணல் வடிவமைப்பிலான செய்தியே இவ்வாறு பகிரப்பட்டு வருகிறது.
இது குறித்து ஆராயுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதன் அடிப்படையில், FactSeeker இதன் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்தது.
இச் செய்தி வெளியாகியுள்ள இணையதளத்தை ஆராய்ந்ததில், இது Daily Mirror ஊடக நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் அல்ல என்பதை உறுதிப்படுத்த முடிந்தது. இவ்வலைத்தளத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள இலச்சினை Daily Mirror ஊடக நிறுவனத்தின் பழைய இலச்சினை என்பதையும் அறிய முடிந்தது.
மேலும், இவ்வாறான செய்தி Daily Mirror இன் உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் வெளியாகி உள்ளதா என ஆராய்ந்ததில், அவ்வாறான செய்தி எதுவும் வெளியாகவில்லை என்பதையும் உறுதிப்படுத்த முடிந்தது.
இது தொடர்பில் Daily Mirror இணையதள நிர்வாகி ஒருவரிடம் FactSeeker வினவிய போது, Daily Mirror வலைத்தளத்தைப் போலவே ஒரு போலி வலைத்தளம் இருப்பதாகவும், இது ஒரு போலியான செய்தி என்றும் பல சந்தர்ப்பங்களில் இது குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
ஆகவே, “இலங்கையில் வசிப்பவர்கள் வரிகளிலிருந்து வருமானத்தைப் பெறத் தொடங்குவார்கள்” என்று அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்ததாக “Daily Mirror” இணையதள பக்க வடிவமைப்புடன் வெளியாகிய செய்தி போலியானது என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.