AI தொழிநுட்பம் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்
AI மூலமாக போலியாக உருவாக்கப்பட்டு உண்மையென பகிரப்படும் புகைப்படங்கள், காணொளிகள் குறித்து அவதானத்துடன் இருக்க வேண்டியது எமது பொறுப்பாகும்.
by Anonymous |
ஏப்ரல் 2, 2024
செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட (Artificial intelligence) போலியான பல புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நடந்தவை என சமூக வலைதள பதிவுகளாக இந்த புகைப்படங்கள் பகிரப்பட்டு வருவதும், உண்மை சம்பவங்கள் என பலரும் பகிர்ந்து வருவதும் காணக்கூடியதாக உள்ளது.
இது குறித்து factseeker தொடர்ச்சியாக உண்மைகளை கண்டறிந்து பொதுமக்களுக்கு அறியத்தருகின்றது.
மேலும், இது Is It AI? , hive moderation தொழினுட்பங்களை பயன்படுத்தி இந்த புகைப்படங்கள் போலியானவையேன கண்டறிந்து அவற்றை வெளிப்படுத்தியுள்ளோம்.
இதேபோன்று பல புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்ற நிலையில்,இவை உண்மையான நிகழ்வுகளா அல்லது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலியானவையா என்பதைக் கண்டறியுமாறு Factseeker கேட்டுக்கொள்கிறோம்.
கடந்த சில வாரங்களில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட AI புகைப்படங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன.
- இராவணன் பயன்படுத்திய பொருட்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் கண்டெடுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வந்த நிலையில், அது AI தொழிநுட்பத்தின் மூலமாக உருவாக்கப்பட்ட போலியான புகைப்படம் என்பதை factseeker கண்டறிந்து, இவ்வாறு பகிரப்படும் செய்தியில் எந்த உண்மைத்தன்மையும் இல்லை என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.
- அதேபோன்று பாடசாலை ஒன்றின் இல்ல விளையாட்டுப்போட்டியின் போது உருவாக்கப்பட்ட இல்லங்கள் என பகிரப்படும் புகைப்படங்களும் AI தொழிநுட்பத்தின் மூலமாக உருவாக்கப்பட்டவை என்பதையும் இதன்போது கண்டறிய முடிந்தது.
மேலும், காஸா பகுதியில் போர் முரண்பாடுகளில் சிக்குண்டு பாதிக்கப்பட்ட குழந்தைகளாகக் காண்பிக்கப்பட்ட புகைப்படங்களும் , அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறித்து உருவாக்கப்பட்ட புகைப்படம், பாப்பரசர் மக்கள் மத்தியில் உரையாற்றும் விதத்தில் உருவாக்கப்பட்ட புகைப்படம் என்பன AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இன்றைய தொழிநுட்ப வளர்ச்சியில் அதி சிறந்த ஒன்றாக AI கருதப்படுவதுடன், அதன் மூலமாக பல்வேறு விடயங்கள் இலகுவாக கையாளப்படுகின்றன. அதே வேளையில், போலியாக உருவாக்கப்பட்டு மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் புகைப்படங்கள், காணொளிகள் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்ற நிலையில் அவை குறித்து பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் factseeker வலியுறுத்துகின்றது.