25 லட்சம் கல்விமான்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தவறான செய்தி பரவுகின்றது
2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் வெவ்வேறு காரணங்களுக்காக நாட்டைவிட்டு வெளியேறிய இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகம்.
by Anonymous |
மே 8, 2024
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 25 லட்சம் கல்விமான்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சில செய்திகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல கூறியதாக இணையதளம் ஒன்று முதலில் இந்த செய்தியை வெளியிட்டுள்ள நிலையில் அச்செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டும் வருகின்றது.
எனினும், கல்விமான்கள் நாட்டை விட்டு வெளியேறியதை உறுதிப்படுத்தும் தரமோ அல்லது வழியோ இல்லாத காரணத்தினால், factseeker, இது குறித்து பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரலவிடம் வினவியது.
இது குறித்து கருத்து தெரிவித்திருந்த பேராசிரியர் வசந்த அத்துகோரல, 25 லட்சம் கல்விமான்கள் நாட்டை விட்டு வெளியேறியதாக தாம் ஒருபோதும் கூறவில்லை என தெரிவித்திருந்தார். கடந்த இரண்டு வருடங்களில் பல்வேறு காரணங்களால் வெளிநாடுகளுக்குச் சென்ற தொகையை இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின் அடிப்படையில் சமர்ப்பித்ததாகவும் ஆனால் ஊடகங்கள் அச் செய்தியின் அர்த்தத்தை மாற்றி செய்தியை வெளியிட்டதாகவும் அவர் factseeker இடம் தெரிவித்திருந்தார்.
இதன் காரணமாக கடந்த நான்கு வருடங்களில் வெளிநாட்டுக்கு சென்றுள்ள இலங்கையர்களின் தரவுகளை இலங்கை மத்திய வங்கி மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் தரவுகளின்படி இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டில் இலங்கை கொவிட் வைரஸ் தொற்று தாக்கத்தை எதிர்கொண்டிருந்ததுடன், 2022 ஆம் ஆண்டில் நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்திருந்தது. அதற்கமைய 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் வெவ்வேறு காரணங்களுக்காக நாட்டைவிட்டு வெளியேறிய இலங்கையர்களின் எண்ணிக்கை உயரிய மட்டத்தை வெளிப்படுத்துகின்றது.