16 எம்.பிக்கள் மாத்திரமா தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பிரகடனங்களை சமர்ப்பித்துள்ளனர்?

மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அவர்களில் இல்லை என பகிரப்படும் செய்தி போலியானது
by Anonymous |
ஆகஸ்ட் 15, 2024

சொத்துப் பிரகடனங்களை வழங்காத பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறித்து கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவருகின்றன. இதேவேளை, ‘பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் மாத்திரமே தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பிரகடனங்களை சமர்ப்பித்துள்ளதாகவும், மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அவர்களில் இல்லை’ எனவும் சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவுகளை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
இதில், Transparency International Sri Lanka வின் உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.tisrilanka.org/mpassets/ என்ற இணையதளத்தையும் மேற்கோள்காட்டி சில பதிவுகள் பகிரப்படுகின்றன. இப்பதிவுகளில், முன்னாள் மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களில் 17 பேரின் சொத்துக்கள் மற்றும் பொறுப்பு அறிக்கைகள் மாத்திரமே அங்கு பதிவிடப்பட்டுள்ளன. மேலும் அதில் வெளியிடப்பட்டுள்ள சொத்து அறிக்கைகளில், “2023/2024 ஆண்டு” சொத்துக்கள் மற்றும் பொறுப்பு அறிக்கைகளில் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனின் தரவுகள் மட்டுமே தரவேற்றப்பட்டுள்ளது.
சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பிரகடனங்களை வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கண்டறிய இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையதளத்தை ஆராய்ந்த போது, ஆணைக்குழுவிற்கு கடந்த 30.06.2024 வரை வழங்கப்பட்ட தரவுகளின் படி 2024.06.30 ஆம் திகதிக்குள் சொத்துப் பிரகடனங்களை சமர்ப்பிக்க வேண்டிய 169 பாராளுமன்ற உறுப்பினர்களில் 116 பேர் தமது சொத்துப் பிரகடனங்களைச் சமர்ப்பித்துள்ளதாகவும் 53 பேர் இதுவரை சொத்துப் பிரகடனங்களை சமர்ப்பிக்கவில்லை என்பதையும் அறிய முடிந்தது.
2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் தடுப்பு சட்ட விதியின் படி “2023/2024” ஆண்டுகளின் தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புப் பிரகடனங்களை அறிவிக்க வேண்டிய அதிகாரிகள் உட்பட தனிநபர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரங்கள் http://ciaboc.lk என்ற இணையதளத்தில் பார்வையிட முடியும்.

இதில், இலங்கை பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனுரகுமார திஸாநாயக்க, ஹரிணி அமரசூரிய மற்றும் விஜித ஹேரத் ஆகிய மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளார்கள் என்பதை அறிந்துகொள்ள முடிகின்றது.

ஆகவே, ‘பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் மாத்திரமே தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பிரகடனங்களை சமர்ப்பித்துள்ளதாகவும், மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அவர்களில் இல்லை’ எனவும் பகிரப்படும் செய்தியில் உண்மையல்ல என்பதை factseeker உறுதிப்படுத்துகிறது.

 
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                            