ஹோமாகம கூட்டு பாலியல் வன்கொடுமையுடன் தொடர்புபட்டதாக பகிரப்படும் மாணவர்களின் புகைப்படங்கள் AI ஆகும்

Sightengine உட்பட பல AI Detector தளங்கள் மூலம் இப் புகைப்படங்களை ஆராய்ந்ததில், இவை செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
by Anonymous |
ஏப்ரல் 7, 2025

கடந்த சில நாட்களுக்கு முன் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக ஹோமாகம பொலிஸார் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் ஏழு பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
இது குறித்து சமூக வலைதளங்களில் பலர் தமது கருத்துக்களை பதிவிட்டதோடு, கைது செய்யப்பட்ட மாணவர்களின் புகைப்படம் என்றும் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளான சிறுமியின் புகைப்படம் என்றும் சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.

அப் புகைப்படங்களை ஆராய்ந்த போது, சில தெளிவற்ற அம்சங்களை அவதானிக்க முடிந்தது. ‘கைது செய்யப்பட்ட மாணவர்கள்’ என கூறப்படும் புகைப்படத்தில் உள்ள மாணவர்களின் முகங்கள் ஒரே முக அம்சங்களை கொண்டதாக காணப்படுவதோடு, அவர்கள் அணிந்திருக்கும் பாடசாலை சீருடை எமது நாட்டின் பாடசாலை சீருடைக்கு முரணானதாக காணப்பட்டது. மேலும்,’பாலியல் வன்முறைக்கு உள்ளான சிறுமியின் புகைப்படம்’ என பகிரப்படும் புகைப்படத்தில் அதே போன்ற சில முரணான அம்சங்களை காண முடிந்தது. இதன் மூலம், இந்த புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் என்பதை யூகிக்க முடிந்தது.
இதனை உறுதிப்படுத்த, Sightengine உட்பட பல AI Detector தளங்கள் மூலம் புகைப்படங்களை ஆராய்ந்ததில், இப் புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

இந்நிலையில் பலர் இப் புகைப்படம் உண்மையென நம்பி தமது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஆகவே, ஹோமாகம கூட்டு பாலியல் வன்முறை சம்பவம் தொடர்பாக சமூகவலைதளங்களில் பகிரப்படுகின்ற புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் என்பதை FactSeeker உறுதிப்படுத்துகின்றது.
 
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                            