ஸ்ரீ தலதா மாளிகை வழிப்பாட்டின் ஆரம்ப நிகழ்வுக்கான அழைப்பிதழ் என பகிரப்படும் போலியான புகைப்படம்

சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வரும் அழைப்பிதழ் போலியாக உருவாக்கப்பட்டதென்றும் இதுபோன்ற அழைப்பிதழ்கள் யாருக்கும் வழங்கப்படவில்லை என்றும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு மற்றும் அரச தகவல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.
by Anonymous |
ஏப்ரல் 19, 2025

ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்ற புனித தந்த தாது சிறப்பு வழிப்பாட்டின் ஆரம்ப நிகழ்வு நேற்று (18) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிலையில்,இவ்வழிப்பாட்டின் ஆரம்ப நிகழ்வுக்கான அழைப்பிதழ் என புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை FactSeekerஇனால் அவதானிக்க முடிந்தது.
குறித்த புகைப்படத்தில், இது ஜனாதிபதி அவர்களின் அழைப்பின் கீழ் தந்தத்தாதுவை தரிசிக்கும் சிறப்பு நிகழ்வுக்கான அழைப்பிதழ் என தெரிவிக்கப்பட்டிருந்ததுடன் குறித்த அழைப்பிதழுடன் காலை 11.30க்கு முன்னர் கண்டி ஜனாதிபதி மாளிகைக்கு சமூகமளிக்குமாறும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவு மற்றும் அரச தகவல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன. அவ்வறிக்கையில் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வரும் அழைப்பிதழ் போலியாக உருவாக்கப்பட்டதென்றும் இதுபோன்ற அழைப்பிதழ்கள் யாருக்கும் வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அழைப்பிதழ் வழங்கப்படவில்லை என்றாலும், இவ்வாறு முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்படுவதால், FactSeeker இது குறித்து மேலும் ஆராய்ந்தது.
இது தொடர்பாக ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பணிப்பாளர் நாயகம் பிரசன்ன பெரேராவிடம் FactSeeker வினவியதில், எந்தவொரு அரசியல் கட்சித் தலைவருக்கும் அல்லது அரசியல்வாதிக்கும் இந்நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும், இராஜதந்திரிகளுக்கு மாத்திரம் வெளிவிவகார அமைச்சின் மூலம் அழைப்பு விடுக்கப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், அழைப்பிதழ் பெற்ற அனைவரும் விசேட புகையிரதத்தில் கண்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, நிகழ்வு முடிவடைந்ததும் மீண்டும் கொழும்புக்குத் திரும்பி அனுப்பப்பட்டனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
மேற்கூறிய விடயங்களை உறுதிப்படுத்தும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவிடம் எதிர் கட்சி தலைவருக்கு அழைப்பிதழ் வழக்கப்பட்டதா என வினவியதில், அவ்வாறு அழைப்பிதல்கள் எதுவும் வழங்கப்படவில்லை என தெரிவித்தனர்.
மேலும், தூதரகங்களுடன் மேற்கொண்ட விசாரணையிலும், அவர்கள் அதிகாரப்பூர்வ இராஜதந்திர வழிமுறைகளின் கீழ் அழைப்பு பெற்றதாகவும், மேற்கூறிய வகையான அழைப்பிதழ் எதுவும் பெறவில்லை என்றும் உறுதிப்படுத்தினர்.
ஆகவே, புனித தந்த தாது சிறப்பு வழிப்பாட்டின் ஆரம்ப நிகழ்வுக்கான அழைப்பிதழ் என சமூகவலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் போலியானது என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.

இதே போல், புனித தந்த தாது சிறப்பு வழிப்பாட்டிற்கு ஸ்ரீ தலதா மாளிகையில் VIP வரிசை அமைக்கப்பட்டுள்ளதாக பரவும் செய்திகளும் உண்மை அல்ல என்று ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்திருந்தது.
இது தொடர்பாக, ஸ்ரீ தலதா மாளிகையின் ஊடகப் பிரிவிடம் FactSeeker வினவிய போது , “புனித தந்த தாது தரிசனம் பிற்பகல் 1.30க்கு ஆரம்பமானது. பிற்பகல் 3.00 மணி வரையிலான காலப்பகுதியில் அரச அதிகாரிகளுக்கே தரிசனம் காண்பிக்கப்பட்டது. இது எந்தவொரு சிறப்பு நிகழ்வாகவோ, தனிப்பட்ட வரிசையாகவோ அமைக்கப்படவில்லை. பொதுமக்களுக்கு தரிசனம் பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமானது.” எனத் தெரிவித்தார்.
மேலும், முன்னதாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்புகளிலும் தந்த தாது தரிசனம் 18 ஆம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகும் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.

நேரலை ஒளிபரப்பின்போது, பிற்பகல் 1.30 மணியளவில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களின் பங்கேற்புடன் நிகழ்வு ஆரம்பமானதையும், அவர் பிற்பகல் 1.55 மணிக்கு மாளிகையை விட்டு வெளியேறியதையும் தெளிவாகக் காணமுடிந்தது.
 
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                            