வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதாக பகிரப்படும் போலிச்செய்தி

இது போன்ற விளம்பர பதிவுகளால் தனிப்பட்ட தரவுகளை திரட்டும் வகையிலான ஏமாற்று நடவடிக்கைகள் இடம்பெறலாம் என்பதை FactSeeker எச்சரிக்கின்றது.
by Anonymous |
மே 9, 2025

“வேலைவாய்ப்பு, வீட்டிலிருந்தே வேலை செய்யும் வேலையாட்கள் தேவை” போன்ற தலைப்புடன் சில விளம்பர பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
தொழில் அமைச்சின் வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையின் வங்கிகள் மற்றும் முன்னனி வணிக நிறுவனங்களுக்கு இவ் வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதாக அப் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் இதற்கு பலர் தமது கருத்துக்கள் மற்றும் சுய தகவல்களை பதிவிட்டு வருவதால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.
அப் புகைப்படங்களை பதிவிட்டிருந்த முகநூல் பக்கங்களை ஆராய்ந்ததில், அவை இலங்கையை சார்ந்த சமூகவலைதள பக்கங்கள் அல்ல என்பதை உறுதிப்படுத்த முடிந்தது. அப் பக்கங்களில் வெளிநாட்டு பெயர் மற்றும் தகவல்களே உள்ளடக்கப்பட்டுள்ளன. எனவே அவை போலியான முகநூல் பக்கங்கள் என்பதையும் அப் புகைப்பட பதிவுகள் உண்மையானதல்ல என்பதையும் யூகிக்க முடிந்தது.
இது தொடர்பில் மேலும் உறுதிப்படுத்த, தொழில் அமைச்சிடம் FactSeeker வினவிய போது, இது போன்ற முன்னனி வணிக நிறுவனங்களுடன் சேர்ந்து எந்தவொரு வேலைத்திட்டங்களும் எங்களால் முன்னெடுக்கப்படவில்லை என தெரிவித்தனர்.
மேலும், தொழில் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்தை ஆராய்ந்ததில், வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்கள் காணப்பட்டாலும் இது போன்ற திட்டங்கள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
ஆகவே, தொழில் அமைச்சின் வேலைத்திட்டத்தின் கீழ் வீட்டிலிருந்தே வேலை செய்யும் வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவதாக சமூகவலைதளங்களில் பகிரப்படும் விளம்பர பதிவுகள் போலியானவை என்பதை FactSeeker உறுதிப்படுத்துவதோடு இது போன்ற விளம்பர பதிவுகளால் தனிப்பட்ட தரவுகளை திரட்டும் வகையிலான ஏமாற்று நடவடிக்கைகள் இடம்பெறலாம் என்பதையும் எச்சரிக்கின்றது.