வேலையில்லாத இளைஞர்களுக்கு 50,000 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறதா?

இவ்வாறான போலி இணைப்புகள் மூலம் பல்வேறு மோசடிகள் இடம்பெறுவதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு கூறுகின்றது
by Anonymous |
அக்டோபர் 23, 2024

“இலங்கை இளைஞர் வலுவூட்டல் நிதி திட்டம் 2024” இன் கீழ் நிதி வழங்கப்படுவதாக பதிவொன்று சமூகவலைதளங்களில் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
இது Whatsapp போன்ற சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுவதால் factseeker இது குறித்து ஆராய்ந்தது.அப் பதிவில்,
“இலங்கை இளைஞர் வலுவூட்டல் நிதி திட்டம் 2024”
“இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள குடிமக்களுக்கு வேலையில்லாத குடிமக்களுக்கு ஊதியம் வழங்கவும் இழப்பீடு வழங்கவும் 50,000 ரூபாய் மானிய நிதிக்கு இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கட்டணங்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. பயனாளிகள் மத்தியில் இருக்க இப்போதே விண்ணப்பிக்கவும்.விண்ணப்பதாரர்கள் இலங்கையின் குடிமக்களாக இருக்க வேண்டும் மற்றும் 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.உங்கள் விண்ணப்பத்தை இப்போது சமர்ப்பிக்க கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவினரிடம் factseeker வினவிய போது, அவ்வாறான வேலைத்திட்டம் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் இவ்வாறு பரப்பப்படும் செய்திகள் பொய்யானவை என்றும் தெரிவித்தனர்.
மேலும், இது தொடர்பில் இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவிடம் Factseeker வினவிய போது, இவ்வாறான போலி இணைப்புகள் மூலம் பல்வேறு மோசடிகள் இடம்பெறுவதாகவும், அவ்வாறான இணைப்புகளை திறந்து பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் தெரிவித்தனர்.
ஆகவே, “இலங்கை இளைஞர் வலுவூட்டல் நிதி திட்டம் 2024” இன் கீழ் நிதி வழங்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்ற பதிவு போலியானது என்பதை factseeker உறுதிப்படுத்துகிறது.
 
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                            