“வெப்பநிலை குறித்த அவசர எச்சரிக்கை” என பகிரப்படும் போலிச்செய்தி

நாட்டில் ஏற்படவுள்ள வானிலை மாற்றங்கள் குறித்து சமூக ஊடகங்கள் மற்றும் ஏனைய ஊடகங்கள் மூலம் தற்போது பரவி வரும் தவறான தகவல்களால் பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
by Anonymous |
ஏப்ரல் 30, 2025

“வெப்பநிலை குறித்த அவசர எச்சரிக்கை” என்ற பதிவொன்று Whatsapp மற்றும் ஏனைய சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதனிக்க முடிந்தது. அவ்வாறு பகிரப்படும் செய்தியில் ” உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது… ஏப்ரல் 29 முதல் மே 12 வரை நாட்டின் வெப்பநிலை 45°C முதல் 55°C வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளதாகவும், அதன் காரணமாக நேரடி வெப்பத்தை எதிர்கொள்ள வேண்டாம் என்றும், வெளியே செல்ல வேண்டிய நேரங்களில் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அப்பதிவில் ” ஏப்ரல் 29 முதல் மே 12 வரை, காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, யாரும் வெளியே செல்லக்கூடாது (திறந்தவெளியில்), எனவே எவருக்கேனும் மூச்சுத் திணறல் அல்லது திடீரென நோய்வாய்ப்பட்டால், உடனடியாக ஒரு மருத்துவரை நாடவும், காற்றோட்டம் இருக்கும் வகையில் அறைக் கதவைத் திறந்து வைக்கவும், கையடக்க தொலைபேசி பயன்பாட்டைக் குறைக்கவும்,கையடக்கத் தொலைபேசி வெடிக்கும் அபாயம் உள்ளது, தயவுசெய்து கவனமாக இருங்கள் மற்றும் மக்களுக்கு இதனை அறிவுறுத்துங்கள்” என்ற காரணிகளுடன் மேலும் பல விடயங்களை உள்ளடக்கிய வகையில் இது பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டதாகவும் இந்த செய்தி பகிரப்படு வருகின்றது.
பதிவு பின்வருமாறு :

எனவே, சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டுவரும் இப்பதிவு குறித்து FactSeeker ஆராய்ந்து பார்த்ததில், இது போன்ற எச்சரிக்கையை இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது. மேலும், ஏப்ரல் 29ஆம் திகதி வெப்பநிலை தொடர்பான ஒரு அறிவிப்பு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருந்தாலும், அதற்கும் இப்போது சமூக வலைதளங்களில் பகிரப்படும் இப்பதிவுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதையும் அவதானிக்க முடிந்தது.

மேலும், இது குறித்து இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ப்ரீத்திகா ஜெயக்கொடியிடம் FactSeeker வினவிய போது, அப்பதிவில் கூறப்படுவது போல் எவ்விதமான அபாயமும் தற்போது நாட்டில் ஏற்படவில்லை என்றும், இது தொடர்பான எச்சரிக்கை எதுவும் தங்களால் வெளியிடப்படவில்லை என்றும் உறுதிப்படுத்தினார். மேலும், இப்போலியான பதிவு தொடர்பில் ஊடக அறிக்கையொன்றையும் திணைக்களம் வெளியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அவ்வாறு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
எதிர்வரும் நாட்களில் ஏற்படவுள்ள வானிலை நிலைமைகள் குறித்த அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் பரவுகின்றன. எனினும் நாட்டின் வானிலை நிலைமைகள் குறித்து 24 மணி நேரமும் திணைக்களம் அவதானித்து வருகிறது. வரவிருக்கும் வானிலை நிலைமைகள் குறித்து திணைக்களத்தால் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ முன்னறிவிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் தொடர்ந்து கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் நாட்டில் ஏற்படவுள்ள வானிலை மாற்றங்கள் குறித்து சமூக ஊடகங்கள் மற்றும் ஏனைய ஊடகங்கள் மூலம் தற்போது பரவி வரும் தவறான தகவல்களால் பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என்று தயவுசெய்து கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சமீபத்திய வானிலை தகவல்கள் மற்றும் அதிகாரப்பூர்வ வானிலை முன்னறிவிப்புகளை வளிமண்டலவியல் திணைக்கள இணையதளம் (https://meteo.gov.lk) மற்றும் பேஸ்புக் பக்கத்தில் (http://www.facebook.com/SLMetDept/) காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் ஆராய்ந்த போது, இதே பதிவு பல்வேறு காலப்பகுதிகளில் இந்தியாவிலும் பகிரப்பட்டு வருவதை அவதானிக்க முடிந்தது.எனினும் அந்த பதிவுகளில் திகதிகளில் மாற்றங்கள் இருப்பதுடன் ஏனைய அணைத்து காரணிகளும் ஒன்றாகவே உள்ளது. அதற்கு அங்குள்ள வானிலை ஆய்வாளர்கள் மறுப்பு தெரிவித்திருப்பதையும் அவதானிக்க முடிந்தது.

ஆகவே, “வெப்பநிலை குறித்த அவசர எச்சரிக்கை” என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்ற இந்த பதிவு போலியானது என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.
 
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                            